5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அரசாணை வெளியீடு



5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை திங்கள்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.


இலவசக் கட்டாயக் கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புகளுக்கு, தமிழகத்தில் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதற்கு பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

''இடைநிற்றல் அதிகரிக்கும். மாணவர்களிடையே உளவியல் பாதிப்பு உருவாகும். மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படும்'' என்றெல்லாம் அறிவுசார் சமூகத்தினர் எதிர்வினையாற்றினர். இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வு நடத்தப்படாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.


மீண்டும் சில நாட்களிலேயே 5, 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். இது தொடர்பாக செப்டம்பர் 13-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்குத் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தனர். இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கையைப் பரிசீலனை செய்து, பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று கடந்த 4-ம் தேதி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து, தமிழக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், ஏற்கெனவே உள்ள பழைய தேர்வு நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments