இந்திய சிறுபான்மையினரின் நிலை குறித்து அமெரிக்க மத சுதந்திர அமைப்பு கவலை!



இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் அவர்களிடம் காட்டப்படும் பாகுபாடுகள் ஆகியனவற்றைக் கவனத்தில் கொண்டு, அச்சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

எதிர்கட்சித் தலைவர்கள், பல்வேறு மதத்தவர்கள் ஆகியோரை மதிப்பது, மத ஆர்வலர்களுடனும், மதத் தலைவர்களுடனும் சகிப்புத்தன்மையையும் பரஸ்பர மரியாதையையும் வளர்த்துக் கொள்வது ஆகியனவற்றின் முக்கியத்துவத்தை, அமெரிக்க அரசாங்க அதிகாரிகளின் இந்தியப் பிரிவு, ஆளுங்கட்சிக்கு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனத்தின் தகவல் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் மூத்த அரசாங்க அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்புகளில், மத வன்முறைகள், சிறுபான்மையினருக்கு எதிரான வகுப்புவாத வன்முறைகள் நடைபெறுவதைப் பற்றிய கவலைகள் எழுப்பப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) பாராளுமன்றம் அளித்த ஒப்புதலையும் இந்த அறிக்கை முக்கியமாக எடுத்துக்காட்டியுள்ளது.

மேலும் ஆளும் பாஜக உட்பட இந்து பெரும்பான்மை கட்சிகளின் தலைவர்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக விரோதமுள்ள கருத்துகளை பொதுவிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வருவதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

‘மாட்டுக்காக நடத்தப்படும் கொலைகள், கும்பல் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் காரணங்களால் குற்றவாளிகளைத் தண்டிக்க அதிகாரிகள் பெரும்பாலும் தவறிவிட்டனர். சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, பெரும்பாலும் குற்றவாளிகளை அவர்களுக்கு எதிரான வழக்கு பதியப்படுவதிலிருந்து பாதுகாக்கும் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களையே குற்றாவாளிகளாக்கி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்’ என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கிடையே அமெரிக்க காங்கிரஸின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ 2019 ஆண்டின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் இந்தியாவில் மத சுதந்திரத்தை மீறும் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்து, ‘அயல்நாட்டு அரசாங்கம் ஒன்று இந்திய குடிமக்களின் நிலை குறித்து கருத்து தெரிவிக்க எந்தவொரு அதிகாரமும் இல்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments