புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்தால், எச்சில் துப்பினால் கடும் நடவடிக்கை.! கலெக்டர் எச்சரிக்கைபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (13.07.2020) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரேனா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல், போன்ற பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்றைய தினம் மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைள், பரிசோதனைகள், நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தல், எச்சில் துப்புதல் ஆகியவை மூலம் பிறருக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பாக அமையும் என்பதால் மேற்கண்ட இச்செயல்கள் நடைபெறாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளது.

எனவே இதனை கருத்தில் கொண்டு கொரோனா நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் எச்சில் துப்புதல் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று மேற்கண்ட செயல்களில் நபர்கள் ஈடுபட தங்கள் வளாகத்தில் அனுமதி அளிக்கும் தேநீர் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகார்களுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு.ரமேஷ்பாபு அவர்களின் 9944959595, 9585959595 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ.மீனாட்சி சுந்தரம், ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் (பொ) மரு.மலர்விழி, பொது சுகாதாரத் துணை இயக்குநர்கள் மரு.அர்ஜுன்குமார், மரு.கலைவாணி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments