ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி.. முதல்கட்ட சோதனை வெற்றி..!



கொரோனாவுக்கு எதிராக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் முழுவதிலும் தினமும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், பாதிப்பு எண்ணிக்கையும் அனைவரையும் கவலை கொள்ள செய்து இருக்கின்றன. 

எனவே எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவது என்ற வைராக்கியத்தில் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன. உலக நாடுகளின் மருந்து ஆய்வு நிறுவனங்களின் பரிசோதனைக்கூடங்கள் அனைத்தும் கொரோனா என்ற ஒற்றை அரக்கனை ஒழிப்பதற்கான தடுப்பூசி எனும் ஆயுதத்தை உருவாக்குவதில் இரவு-பகலாக உழைத்து வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. 

இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? என்பதும் ஆராயப்பட்டது.

இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்டபட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

இதில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறியிருப்பதாவது:-

இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலும் அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டுள்ளோம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் இரட்டை கரங்களையும் இந்த தடுப்பூசி உருவாக்கி இருக்கிறது. அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது. இந்த செல்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உதவுகிறது. 

ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம். மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது. இவ்வாறு அட்ரியன் ஹில் தெரிவித்தார்.

இதைப்போல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

இதற்கிடையே இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடிலா ஆகிய 2 நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து உள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியை சோதிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவ நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்திருந்தது.

அதன்படி தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரும் ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கான முன்பதிவை நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது. முதற்கட்ட பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படும் 375 பேரில் சுமார் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இந்த முன்பதிவை முடித்து வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) முதல்கட்ட பரிசோதனை தொடங்க வாய்ப்பு இருப்பதாக பரிசோதனைக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்தார்.

இந்த முதற்கட்ட பரிசோதனை நல்ல விளைவை அளித்தால், அடுத்ததாக 2-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் தடுப்பூசியின் தரம் உறுதி செய்யப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments