புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமல்.! கலப்பட பொருளை தயாரித்தால் ஜெயில்.!புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. கலப்பட பொருளை தயாரித்தாலோ, விற்றாலோ ஜெயில் தண்டனை விதிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.


கடந்த 1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கு பதிலாக, கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2019‘ நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-2019 நேற்று அமலுக்கு வந்தது. இதை அமல்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தனது அரசிதழில் வெளியிட்டது.

நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றை அமைக்க இச்சட்டம் வகை செய்கிறது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:-

ஏற்கனவே இருந்த நுகர்வோர் சட்டத்தில், தீர்வு கிடைக்க காலதாமதம் ஆனது. எனவே, பாரம்பரிய வியாபாரிகளிடம் இருந்து மட்டுமின்றி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்தும் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக திருத்தங்களுடன் இப்புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது ஒரு புரட்சிகரமான சட்டம். நேர்மையற்ற வர்த்தகம், பொய் விளம்பரங்கள் ஆகியவை தொடர்பான புகார்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விசாரிக்கும். நுகர்வோர், ஆன்லைன் மூலமாகவே புகார் செய்யலாம்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், விலை விவரம், பொருட்களை மாற்றிக்கொள்ளுதல் ஆகிய விவரங்களுடன் பொருள் உற்பத்தி செய்யப்பட்ட நாடு பற்றிய விவரத்தையும் தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்படும்.

மாற்று வழிமுறையாக, மத்தியஸ்தத்துக்கும் இதில் வழி செய்யப்பட்டுள்ளது. மத்தியஸ்தம் மூலமான தீர்வை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. மத்திய நுகர்வோர் விவகாரத்துறை மந்திரியை தலைவராக கொண்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் அமைக்க இச்சட்டம் வகை செய்கிறது.

நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் ரூ.5 லட்சம் வரை தொடர்பான வழக்குகளுக்கு கட்டணம் கிடையாது. பொருளை உற்பத்தி செய்பவர், விற்பவர் ஆகியோரிடம் இருந்து இழப்பீடு பெறவும் வழி உண்டு.

கலப்பட பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், விற்பவருக்கும் சிறைத்தண்டனை விதிக்க விதிமுறை உள்ளது. முதல்முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிமம் 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்படும். மீண்டும் குற்றம் செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments