ரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை
ரீவைண்ட் 2020 : மனித நேய டாக்டர் முதல் மலைப்பாம்பு வரை - டாப் 10 புதுக்கோட்டை

        சுவாரஸ்யங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. 2020ஆம் ஆண்டு முடிந்து 2021ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. ஒருசிலருக்கு 2020ஆம் ஆண்டு எந்த சுவாரஸ்யமும் இன்றி கடந்து போயிருக்கும். சிலருக்கு லாக்டவுனிலேயே முடிந்து விட்டது 2020ஆம் ஆண்டு. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டில் நிகழ்ந்த டாப் 10 சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றி பார்க்கலாம்.


ரீவைண்ட் 2020.. புதுக்கோட்டை டாப் 10..!
சிலரது மனிதநேயம் மிக்க செயல்தான் உலகத்தை உயிர்புடன் வைத்திருக்கிறது. உயிருக்கு போராடிய இளைஞரை காப்பாற்றிய டாக்டர், மைனாகுஞ்சுகளை காப்பாற்றிய இளைஞர் என பலரது மனித நேயத்தை அடையாளம் காட்டியது 2020ஆம் ஆண்டு.


கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர், 8 ஆண்டுகளுக்கு பின்னர் மாயமான முதியவரை நாகலாந்தில் கண்டுபிடித்த காவல்துறையினர் வரை 2020ஆம் ஆண்டில் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்றனர்.1.மனித நேய டாக்டர்

புதுக்கோட்டையில் வாயில் நுரை தள்ளி உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டர் முதலிடம் பிடித்துள்ளார்.

வாயில நுரை துள்ளுது.. நடுரோட்டில் வலிப்பு வந்துச்சு உயிருக்கு போராடுகிறார் எப்படிங்க பார்த்துட்டு பேசாம போறது.. அதான் உதவி செய்தேன் என்று உயிருக்கு போராடிய இளைஞருக்கு முதலுதவி செய்த டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆலங்குடி, தவலைப்பள்ளம் சாலை வழியாக டாக்டர் பெரியசாமி காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு இளைஞர் வலிப்பு நோயால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தார். நடுரோட்டிலேயே கீழே விழுந்து.. நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். இதை பார்த்ததும் டாக்டர் காரை நிறுத்த சொல்லி, அந்த இளைஞருக்கு முதலுதவி செய்து உயிரை காப்பாற்றினார். அதன்பிறகு ஆம்புலன்ஸை வரவழைத்து மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார். மனிதநேயம் மிக்க டாக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


2.டிக் டாக் இளைஞர்

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுத்த டிக் டாக் இளைஞர் மீது பொதுமக்கள் கடும் கோபத்தோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வடகாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன், புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஒரு டிக்டாக் அடிமை. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சாலையில் நடந்து செல்வோரை துன்புறுத்தும் விதமாகவும் பயமுறுத்தும் விதமாகவும் பல்வேறு திரை இசை பாடல்களுக்கு நடனம் ஆடி டிக்டாக் செய்தார். பொதுமக்கள் இவரின் தொந்தரவை அடக்கி கொள்ள முடியாமல் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் நிலையத்தில் புகார் செய்யவே, டிக் டாக் நடன புயலை காவல்துறையினர் கைது செய்தனர். 2 நாட்கள் கதற கதற அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர்.


3அமைச்சர் விஜயபாஸ்கர் விசில் போட்டி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அதிமுக விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே ஒரு போட்டி ஒன்று நடக்க உள்ளது அதில் யார் சத்தமாக விசில் அடிக்கிறார்கள் என்பது தான் இந்த போட்டி என்றார். இதன் பின்னர் எம்எல்ஏ ஆறுமுகம் பலத்த கரகோஷத்துடன் விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களும் உற்சாகமாய் விசில் அடித்தனர்.

4சுற்றித்திரிந்த மாடுகள்


கொரோனா காலத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. மனிதர்கள் வீட்டிற்குள் அடங்கியிருக்க 144 தடை உத்தரவுக்கு அடங்காத மாடுகள் சாலைகளில் சுற்றித்திரிந்தன பொதுமக்களுக்கு தான் தடை உத்தரவு எங்களுக்கு இல்லை என்று மாடுகள் ஊர்வலம் வந்தன.

ரீவைண்ட் 2020.. முதல்வரை வாழ்த்தி ஸ்டிக்கர் ஒட்டிய மாணவர்கள் முதல் சேலம் நடராஜன் வரை.. டாப் 10

5.பொண்ணு குடுக்க மாட்றாங்கப்பா

கொரோனா காலத்தில் லீவு விட்டிருந்த டாஸ்மாக் கடைகள் சில மாதங்கள் கழித்து திறக்கப்பட்டன. இளைஞர்களை விட தாத்தாக்கள்தான் கையில் குடை வாக்கிங் ஸ்டிக் சகிதமாக டாஸ்மாக் வந்து வரிசையில் நின்றனர். சாராயத்தை குடித்து நரம்பு தளர்ந்து விட்டது எனக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்றாங்கப்பா என்று ஒரு தாத்தா பேசிய வீடியோ வைரலானது.

6.மகளை நரபலி கொடுத்த அப்பா

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வித்யா. தச்சங்குறிச்சியில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த அவர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். திடீரென்ற வித்யா மாயமானார். பெற்றோரும் உறவினர்களும் வித்யாவை தேடினர். அப்போது பாப்பான்குளம் அருகே தைலமரக்காட்டு முகத்தில் பலத்த காயம் இருந்ததுடன், கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் மூச்சு திணறியபடி கிடந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவர் உயிரிழந்தார். சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்ததாக தந்தை பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

7.மைனாக்குஞ்சுகளை காத்த இளைஞர்


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் காற்றின் வேகத்தால் நிலை தடுமாறி கீழே விழுந்த மைனா குஞ்சுகளை பனைமரம் ஏறி அதன் கூட்டில் சேர்த்துள்ளார் இளைஞர் ஆனந்த். மனிதநேயமிக்க இந்த செயல் காரணமாக இளைஞர் ஆனந்துக்கு பாராட்டுக்களும், நன்றிகளும் குவிந்தன. ஒசுவப்பட்டி என்ற கிராமத்தில் நிகழ்ந்த மனிதநேயமிக்க செயல் சமூக வலைதளங்களில் பெரியளவில் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றது.

8.மொய் விருந்து இல்லையே

கொரோனா காலத்தில் மொய் விருந்து களையிழந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கோடிகளில் வசூலாகும் மொய் விருந்து வைக்க முடியாமல் போய் விட்டதே என்று மக்கள் ஏங்கித்தான் போய் விட்டனர்.9.வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு

புதுக்கோட்டை மாவட்டம் கேசராபட்டியில், வீடுகளுக்குள் புகுந்து கோழிகளை விழுங்கிய மலைப் பாம்பை, தீயணைப்பு துறையினர் பிடித்தனர். கேசராபட்டியில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மலைம்பாம்பு, ஊருக்குள் புகுந்து, அடுத்தடுத்து 3 வீடுகளில் கோழிகளை விழுங்கி உள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் 12 அடி நீள மலைப் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

10.மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்பு


ஆலங்குடி தாலுகா வம்பன் காலனியை சேர்ந்தவர் குமாரவேல் மனநிலை பாதிக்கப்பட்டவர். திருமணமாகாதவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நாகலாந்து மாநிலத்தில் குமாரவேல் சுற்றித்திரிவதாக அங்குள்ளவர்கள் மூலம், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அங்குள்ள தமிழ்ச்சங்கத்தின் உதவியுடன் குமாரவேல் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். தனிவாகனம் மூலம் பத்திரமாக புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து குமாரவேலை வரவேற்றனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் வட மாநிலத்தில் மீட்கப்பட்டது அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments