'சவர்மா' சாப்பிட்ட 17 பேருக்கு திடீர் உடல்நலக் கோளாறு!




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு துரித உணவுக் கடையில் 'சவர்மா' (ரொட்டிக்குள் சிக்கன் வைத்த உணவு) என்ற உணவுப் பொருளை வாங்கி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


        மணமேல்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு நண்பரின் திருமணத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள், சிறப்பு விருந்தாக அறந்தாங்கியில் உள்ள ஒரு புதிய துரித உணவுக் கடையில் இருந்து சவர்மா என்ற உணவை 8 பார்சல்கள் வாங்கிச் சென்று 12 பேர் சாப்பிட்டுள்ளனர். மறுநாள் திங்கள்கிழமை மதியம் ஜாகிர்உசேன், அசாருதீன், ரவுசுதீன், சல்மான் பாரிஸ், வசுபுதீன், மைதீன் உள்பட 12 பேருக்கும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு மணமேல்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினாலும், மறுபடியும் வாந்தி ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு வந்துள்ளனர். தற்போது 3 பெண்கள் உட்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல அறந்தாங்கியில் அதே கடையில் சவர்மா வாங்கிச் சாப்பிட்ட 5 பேருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
    இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, “சவர்மா என்பது ரொட்டிக்குள் சிக்கன் வைத்து செய்யும் ஒருவகை உணவு. அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. டாக்டர்களும் ஃபுட் பாய்சன் என்று சொல்கிறார்கள். கெட்டுப்போன சிக்கன் வைத்து எங்களுக்கு சவர்மா செய்து கொடுத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என்றனர்.

 

இத்தனை பேர் மருத்துவமனைக்குப் போன பிறகும் கூட, உணவு பாதுகாப்புத்துறை ஏனோ அமைதியாக இருந்துள்ளது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, விசாரணையை மேற்கொண்டுள்ளது உணவு பாதுகாப்புத்துறை. உணவே மருந்து என்கிறார்கள் ஆனால் இங்கே?


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments