அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டாலும் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்




 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கான வகுப்புகள் நடக்கும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அதன் தொடர்ச்சியாக கடந்த 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன.

தொடர்ந்து 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 3-ந்தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெறுகிறது. அதற்கான விரிவான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது.

வகுப்புகள் தொடரும்

இந்த நிலையில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கான பொதுத்தேர்வு மற்றும் முழு ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக சட்டசபையில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பை வாசித்தார்.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டு விட்டதால், 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்ற ஒரு கேள்வி நேற்று எழுந்தது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் சென்னையில் நேற்று நிருபர்கள் கேட்டபோது, ‘9, 10, 11-ம் வகுப்புகளுக்கு வழக்கம்போல பள்ளிகள் செயல்படும். அவர்களுக்கான வகுப்புகள் தொடரும்' என்று கூறினார்.

பொதுத் தேர்வு மற்றும் ஆண்டுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் பொதுத்தேர்வு, ஆண்டுத் தேர்வு நடத்தப்படாத நிலையில் வகுப்புகளை மட்டும் தொடருவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வியையும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் எழுப்பியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments