மின்வாரிய அலட்சியத்தால் அடுத்தடுத்த உயிரிழப்புகள்: பலியான இளைஞர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க SDPI கோரிக்கை!



மணமேல்குடி அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால், தாழ்வாகச் சென்ற உயர் அழுத்த மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாடியபோது சோகம்
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம் ஊராட்சிக்குட்பட்ட ஆலிமுசாவயல் பகுதியைச் சேர்ந்தவர் சுமன். வாலிபரான இவர், நேற்று மாலை தப்பத்தான்வயல் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் தனது நண்பர்களுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த மைதானத்தின் மேலே மிகவும் தாழ்வான நிலையில் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் சென்று கொண்டிருந்தன. விளையாட்டின்போது எதிர்பாராதவிதமாக சுமனின் கை, அந்த மின்சாரக் கம்பியின் மீது பட்டது. இதில் உடல் கருகிய அவர், தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

அடுத்தடுத்து உயிரிழப்பு
ஏற்கனவே இதே பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பிஸ்மி கான் என்ற இளைஞர், அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார். தற்போது அதே பகுதியில் மீண்டும் ஒரு உயிர் பறிபோயிருப்பது அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SDPI கட்சி கண்டனம்
இந்தச் சம்பவம் குறித்து SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் S.A.M. அரபாத் முகமது அப்துல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அம்மாபட்டினம் ஊராட்சியில் பல இடங்களில் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாகத் தொங்குகின்றன. மின்கம்பங்கள் பலவும் சேதமடைந்து எப்போது விழுமோ என்ற நிலையில் உள்ளன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கால்தான் அடுத்தடுத்து இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன.

எனவே, உயிரிழந்த சுமனின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இனி ஒரு உயிர் பறிபோகும் முன், பழுதடைந்த மின்கம்பங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க மாவட்ட நிர்வாகமும், மின்வாரியமும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments