12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யூனிட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு யூனிட் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் யூனிட் தேர்வு எனப்படும் அலகுத் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா தீவிரம் காரணமாகத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. கோவிட் தொற்று காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்வுக்கு முன்னதாகத் திருப்புதல் தேர்வு என்ற வகையில் இந்தத் தேர்வுகளை நடத்தப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது

இந்நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் யூனிட் தேர்வு எனப்படும் அலகுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுகள் மே 27ஆம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இது தொடர்பான விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவிகளுக்குத் தனியாகவும் வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்க வேண்டும்.

* வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர்த்து வேறு செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்களைப் பதிவேற்றக் கூடாது.

* மே 27ஆம் தேதி உயிரியல், வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளும் 29ஆம் தேதி தமிழ் மொழிப் பாடத் தேர்வும் ஜூன் 1ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகளும் ஜூன் 3ஆம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வும் 5ஆம் தேதி வேதியியல் தேர்வும் ஜூன் 7ஆம் தேதி மற்ற தேர்வுகளும் நடத்தப்படும்.

* விடைத்தாளில் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் ஆகியவற்றைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

* மாணவ, மாணவிகள் விடைகளை எழுதி, பெற்றோரிடம் கையொப்பம் பெற்று பிடிஎஃப் வடிவத்துக்கு மாற்றி, ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.

* ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலமே திருத்தி, அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்று கூறப்படும் நிலையில், கரோனாவால் பொதுத் தேர்வை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அலகுத்தேர்வு மதிப்பெண்களைக் கொண்டு, தேர்வு முடிவுகளை வெளியிடவும் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments