மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம், இலவச சேவைகளுக்கு லஞ்சம்; தவறு செய்யும் அலுவலர்கள் பணிநீக்கம்: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை



கரோனா நோய்த் தொற்று சிகிச்சை மற்றும் நிவாரணப் பணி அலுவலர்கள் மற்றும் நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ளவேண்டும் என, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் (மே 18) வெளியிட்ட அறிவிப்பு:

"நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக கரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்றுசேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில், ஒருசில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இதனடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்படி செயல்கள் குறித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்த நிலையில் உள்ள அலுவலராயிருப்பினும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியினையும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது.

மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments