மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தனித் தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அன்பில் பேட்டி


தனித் தேர்வர்கள் மற்றும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் தனியாகத் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.

இன்று காலை (ஜூலை 19) 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார்.

அப்போது, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இந்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி வந்திருக்கிறது. மொத்தமாக, 8,18,129 மாணவர்களின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. 11-ம் வகுப்பில் எந்த தேர்வுக்கும் வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கிறார்கள். தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 8,16,473. தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம்.

39,000 தனித் தேர்வர்கள் இருக்கின்றனர். மேலும், இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்களும், தனித் தேர்வர்களும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்படும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில், கரோனா பரவலைக் கருத்தில்கொண்டும், முதல்வரின் அறிவுறுத்தலின்படியும் தேர்வு நடத்தப்படும்".

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments