ஏடிஎம் கட்டணம் உயர்வு: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமல்


ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்களை மாற்றி கடந்த அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. ஏடிஎம் பயன்பாட்டுச் செலவு அதிகரித்து வருவதையடுத்து கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்ற கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர 2019-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறுஆய்வு செய்தது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை உயர்த்தியது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு நிதி சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தும்போது வங்கிகள் வழியாக பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பரிவர்த்தனைக்கு 15 ரூபாய் கட்டணம் விதிக்கப்படுகிறது. இது (interchange fee structure) இன்டர்சேஞ்ச் கட்டணம் என அழைக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 15 ரூபாயில் இருந்து 17 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.அதே போல நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான (non-financial transactions) பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-லிருந்து, ரூ.6-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த புதிய உயர்வு விகிதங்கள் பணம் மறுசுழற்சி இயந்திரங்களில் (Cash Recycler Machines) செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்

அதுபோலவே பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க வசூலிக்கப்படும் கட்டணமும் உயர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் இருந்து மாதம்தோறும் ஐந்து முறை பணம் எடுக்க கட்டணம் கிடையாது.

அதேபோல பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க மெட்ரோ நகரங்களில் மாதம் தோறும் மூன்று முறையும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறை வரையும் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. அதற்கு மேல் பணம் எடுக்க ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 20 ரூபாய் சேவை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்தை 20 ரூபாயில் இருந்து 21 ரூபாயாக உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments