மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மூன்றாம் அலை வருமா? - ஒரு பார்வை




கேரளாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள கொரோனா தொற்று அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மூன்றாவது அலை வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளாதான். ஆனால் கொரோனா தொற்று பரவலின் முதல் அலையை எதிர்கொண்டு, கொரோனா இல்லாத மாநிலம் என்ற பெயரை பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதும் கேரளா தான். தற்போது மீண்டும் அதிகரிக்கும் கொரோனாவால், கடவுளின் தேசமாக கருதப்படும் கேரளா செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியாவில் பதிவாகும் தினசரி கொரோனா பாதிப்பில் 50 சதவிகிதம், கேராளாவில் பதிவாகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் கேரளா மீண்டும் பெருந்தொற்றின் மையப்புள்ளியாக மாறி வருகிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி தினசரி தொற்று 20 ஆயிரத்தைக் கடந்து பதிவாகிறது. மொத்த கொரோனா பாதிப்பு 33.5 லட்சத்தை நெருங்குகிறது. கேரளாவில் மருத்துவமனை சிகிச்சையில் ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர், மரணமடைந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கேரளாவில் அதிகரிக்க தொடங்கியுள்ள இந்த கொரோனா தொற்று இந்திய மருத்துவ உலகையே விழி உயர்த்த வைத்துள்ளது. என்ன நடந்தது கேரளாவிற்கு? ஏன் இந்த மாற்றம்? தவறுகள் எங்கே? என்ற கேள்வி எல்லோராலும் முன்வைக்கப்படுகிறது.

பண்டிகைக்காக தளர்த்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகள், உள்ளாட்சி தேர்தல், வெளி மாநிலத்தவர்களின் வருகை அதிகரிப்பு, துல்லிய முடிவுகளை தராத ஆண்ட்டிஜென் பரிசோதனை என பல காரணங்கள் கேரளாவின் கொரோனா தொற்று அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகின்றது. நிலைமை எல்லை மீறி செல்வதை அறிந்த மாநில அரசு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு, ஆர்.டி.பிசி ஆர் பரிசோதனை அதிகரிப்பு, நோய் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் என துரித நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் பொது முடக்கம் கூட அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கேரளாவில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுக்கு உதவும் வகையில் தேசிய நோய் தடுப்பு மையத்தில் இருந்து 6 பேர் கொண்ட மத்திய குழு கேரளாவிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா நிலைமை:

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா, சில நாட்களாகவே படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை 15 ஆம் தேதி தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2,405 ஆக இருந்தது, அது ஜூலை 20 ஆம் தேதி 1904 ஆக குறைந்தது. அதன்பின்னர் சிறிது, சிறிதாக குறைந்த கொரோனா ஜூலை 29 ஆம் தேதி மீண்டும் அதிகரித்து 1859 ஆக உயர்ந்தது. அதன்பின்னர் ஜூலை 30இல் கொரோனா பாதிப்பு 1947 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவை, சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகியிருக்கிறது. ஜூலை 30 ஆம் தேதி கோவையில் 230 பேரும், 215 பேரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று குறித்து பேசும் மருத்துவர் சாந்தி, “உலக சுகாதார நிறுவனமே 3 ஆம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்கள் மட்டுமின்றி அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், தற்போதுள்ள டெல்டா வகை வைரஸின் பரவும் வேகம் அதிகமாக உள்ளது. இது சாதாரண கொரோனா வைரஸைவிட 8 மடங்கு அதிகமான தொற்றும் தன்மை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பல நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகமாகிறது. ஆனால் இதில் நிம்மதி தரும் விஷயம் என்னவென்றால் கொரோனா வகை வைரஸில் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இந்த வகை வைரஸின் பாதிப்பு குறைவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுவதையும், முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதிகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கேரளாவில் முறையாக சிகிச்சைகள் செய்யப்படுவதால் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் சரியான பரிசோதனைகள் செய்வதில்லை.

மூன்றாம் அலையை தடுக்க ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் எனும்போது, மத்திய அரசு அதிகளவில் மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கவேண்டும். மத்திய அரசு கேரளா, தமிழகத்துக்கு போதுமான அளவில் தடுப்பூசி வழங்காத காரணத்தால் இங்கு மூன்றாம் அலையின் பாதிப்புகள் அதிகமாக வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்

இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க இயலாது:

இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க இயலாது எனவும், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் கொரோனா 3ஆம் அலை தொடங்கலாம் எனவும் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 3ஆம் அலை 120 நாட்கள் வரை நீடிக்கும் எனவும், இந்த ஆண்டின் இறுதிவரைக்கூட 3ஆம் அலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கட்டுக்குள் இருப்பது போல தோன்றினாலும், கொரோனா பரவல் நிலை எப்பொழுது வேண்டுமென்றாலும் தலைக்கீழாக மாறலாம், அதிகரிக்கலாம் என்று நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்துவது ஒன்றுதான் கொரோனாவின் வீரியத்தை குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments