தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு




தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வருகிற 9 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல்; அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

அதன் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளுடன் வருகிற 23ஆம் தேதி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


பள்ளிகள் திறப்பு

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


** இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

** அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

** கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

** அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

** கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments