கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களின் கையெழுத்து பெற வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!



கிராம ஊராட்சிகளில் கிராமத்தின் அரசு நலத்திட்டங்கள் பெற தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் கிடைக்கவும் கிராம மக்களை கூட்டி விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அதே போல ஊராட்சியின் தேவைகள் முக்கிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும். பல கோரிக்கைகள் அரசுகளுக்கும், அதிகாரிகளுக்கும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் அனுப்பி வைத்து தீர்வு காணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் நடக்கும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளம் கலந்து கொள்கின்றனர். 

கடந்த சில வருடங்களாக புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் ஏராளமான கிராமங்களில் கிராம சபை கூட்டங்களில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. சில ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள நகரம் கிராமத்தைச் சேர்ந்த லெனின் மற்றும் சமூக ஆர்வலர்கள் முதல்-அமைச்சர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கு இணைய வழியில் ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை விவாதித்து தீர்மான நோட்டுகளில் எழுதி பொதுமக்களிடம் கையெழுத்து பெறாமல் வருகைப் பதிவு நோட்டுகளில் மட்டும் கையெழுத்து பெற்றுக் கொண்டு அனுப்பி விடுகின்றனர். 

ஆனால் கடைசிவரை பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் தீர்மான நோட்டுகளில் எழுதப்படுவதில்லை. இதனால் அக்டோபர் 2-ந் தேதி நடக்க உள்ள கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்களை எழுதிய பிறகு கையெழுத்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments