ஆன்லைன் விளையாட்டு மூலம் ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் இழந்த சிறுவன்






தேனி மாவட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து சிறுவன் ஒருவன் ஆன்லைன் விளையாட்டு மூலம் ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் இழந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் ஆன்லைன் விளையாட்டு ஆர்வத்தை கண்டு சமயத்தில் கதிகலங்கி நிற்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படுகிறது. குழந்தைகளின் ஆன்லைன் விளையாட்டு ஆர்வத்தை ஆச்சர்யமுடன், அதிசயத்துடனும் பார்த்த காலம் மாறி, இன்று அச்சத்துடன் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல மணி நேரம் நம் வீட்டு குழந்தைகள் அதில் மூழ்கி கிடப்பதே அதற்கு முக்கிய காரணம்.

ஆன்லைன் வகுப்புக்காக தனது மகனுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்துள்ளார், தேனி மாவட்டத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர். எட்டாம் வகுப்பு படிக்கும் இவரது மகன், ஆன்லைன் வகுப்புகளை தவிர மற்ற நேரங்களில் ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். நாளடைவில் தனது நண்பர்களுடன் இணைந்து விளையாடிய சிறுவன், அதற்கு அடிமையாகியுள்ளார். விளையாட்டில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி, ஆடைகள் போன்றவற்றை வாங்குவதற்கும், விளையாட்டிற்கான ஐடியை புதுப்பிப்பதற்கும் வீட்டில் இருந்த பணத்தை சிறிது சிறிது எடுக்க ஆரம்பித்துள்ளார்.

மகனின் செயல்பாட்டில் வித்தியாசத்தை உணர்ந்த அவனது தந்தை, செல்போனை வாங்கி பார்த்ததில் ஆன்லைன் விளையாட்டில் ஒரு லட்சத்து 60ஆயிரம் ரூபாய் வரை இழந்திருப்பது தெரியவந்தது. தனது மகனை மிரட்டி அவனது நண்பர்கள் ஆன்லைன் விளையாட்டிற்காக பணம் பறித்ததாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குழந்தைகளின் நலனுக்காக இது போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுவன், அவனது நண்பர்கள் மற்றும் பெற்றோரை அழைத்து தேவையான அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments