அவதூறாக பேசிய ரேஷன் கடை ஊழியரை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு





அவதூறாக பேசிய ரேஷன் கடை ஊழியரை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருமயம்: ஊராட்சி மன்ற தலைவர்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள பேரையூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா. இவர், நேற்று அங்குள்ள ரேஷன் கடைக்கு ரேஷன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது ரேஷன் கடையில் பணியில் இருந்த வெள்ளையம்மாளிடம், ஊராட்சி தலைவர் விஜயா பொருட்களை வாங்கிவிட்டு கடைக்கு வெளியில் உள்ள ஆட்டோவில் பை இருப்பதாகவும், வாங்கிய பொருளை ஆட்டோவில் வைத்து விட்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார். 
அப்போது ஊராட்சி தலைவரை, ரேஷன் கடை ஊழியர் ஒருமையில் திட்டியதோடு, அவதூறாக பேசியுள்ளார்.  
தர்ணா போராட்டம் 
இதனால் ஆத்திரமடைந்த விஜயா, சாலையில் அமர்ந்து ஊழியரை கண்டிக்கும் விதமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அதிகாரிகளிடம், அப்பகுதி பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் வெள்ளையம்மாள் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்களிடம் வயது வித்தியாசமின்றி அனைவரையும் ஒருமையில் திட்டுவதாகவும், ரேஷன் கடைக்கு உதவியாளராக தனது கணவரை வைத்துள்ளதாகவும், இதனால் அவ்வப்போது ஊழியருக்கும் பொருட்கள் வாங்க வருபவர்களுக்கும் இடையே பிரச்சினை உருவாவதாக புகார் கூறினர்.  
பரபரப்பு 
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ரேஷன் கடை ஊழியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதோடு பணியிடை நீக்கம் செய்வதாக உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் விஜயா தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். ஊராட்சி தலைவர், ரேஷன் கடை ஊழியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments