இலங்கை கடற்படையால் கொலையுண்ட கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மறு கூராய்வு செய்ய வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்




இலங்கை கடற்படையால் கொலையுண்ட கோட்டைப்பட்டினம் மீனவரின் உடலை குடும்பத்தினரின் கோரிக்கைப்படி மறு கூராய்வு செய்ய வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் கடந்த அக்டோபர் 19-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துக் கப்பல் மூலம் தமிழக மீனவர்களின் படகை இடித்துத் தள்ளியதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியதாகவும், இதனால் கடலில் விழுந்து தத்தளித்த 3 மீனவர்களில் ராஜ்கிரண் கடலில் மூழ்கி பலியானதாகவும்,  சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை மீட்டு இலங்கை கடற்படையினர் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரணை சடலமாக மீட்ட இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. ஒப்படைக்கப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு உடற்கூராய்வு மேற்கொள்ளாமல் காவல்துறை முன்னிலையில் அங்குள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது. சவப்பெட்டியில் அடைக்கப்பட்ட உடலின் முகம் கூட குடும்பத்தினருக்கு காட்டப்படவில்லை. இதனால் இலங்கை அரசு ஒப்படைத்தது ராஜ்கிரண் உடல் தானா என்பது குறித்து அவரது குடும்பத்தினரும், அப்பகுதி மீனவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கொலையுண்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் ஏன் உடற் கூராய்வு செய்யப்படவில்லை? இந்த விசயத்தில் உண்மையை அறிய திமுக அரசு குறைந்தபட்ச நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாதது ஏன்?  என்ற கேள்வி எழுந்தது.

மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படை  கூறியது போல கடலில் விழுந்துதான் இறந்தாரா? அல்லது அடித்துக் கொல்லப்பட்டாரா? சுட்டுக் கொல்லப்பட்டாரா? உடன் சென்ற மீனவர்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த உண்மையான நிலை கூட தெரியாமல், இலங்கையின் உடற்கூராய்வை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு மட்டுமின்றி, குறைந்தபட்சம் மீனவரின் முகத்தினை காண அவரது குடும்பத்தினருக்கு கூட காவல்துறை அடக்குமுறை மூலம் அனுமதி மறுக்கப்பட்டது. மீனவரின் மரணத்தில் குறைந்தபட்ச பிரேத பரிசோதனை நடவடிக்கை கூட தமிழக அரசால் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. எனவே உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என அவரது மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

ஆகவே, மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இந்திய குற்றவியல் சட்டத்தின் படி மூன்று மருத்துவர்களை வைத்து மீண்டும் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மீனவர் ராஜ்கிரண் மரண விவகாரத்தில் நீதி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுகொள்வதோடு, இந்த விவகாரத்தில் மீனவர்களுடன் இணைந்து எஸ்.டி.பி.ஐ. கட்சியும் தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments