திருமயம் அருகே பயங்கர விபத்து: மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் தீப்பிடித்தது; 2 பேர் சாவு




திருமயம் அருகே நேற்று இரவு அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பஸ்சும், மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 2 பேர் உடல் கருகி பலியானார்கள்.

இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

பஸ் தீப்பிடித்தது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் ராமேசுவரம்-திருச்சி தேசிய நேடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாம்பாற்று பாலம் பகுதியில் இரவு 10.15 மணியளவில் வந்துகொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பஸ் மீது மோதியது. இதில் பஸ்சின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. அப்போது ஏற்பட்ட உராய்வில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பஸ்சுக்குள் புகை பரவ ஆரம்பித்தது.

2 பேர் சாவு

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பயணிகள் ஓவென்று கூச்சலிட்டவாறே, பதறியடித்துக்கொண்டு பஸ்சை விட்டு மளமளவென இறங்கினார்கள். தீப்பற்றி எரிவதற்குள் பயணிகள் அனைவரும் கீழே இறங்கிவிட்டதால் யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை.

ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் உடல் நசுங்கி் இறந்துபோனார். மற்றொருவர் பஸ் தீப்பிடித்ததில் அதன் அடியில் சிக்கி உடல் கருகி பலியானார்்.

இறந்தவர்கள் யார்?

இந்த விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள், திருமயம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்துவிட்டது.

இந்த விபத்தில் பலியான இருவரின் பெயர், விவரம் தெரியவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

இந்த விபத்து பற்றி திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments