திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்பட தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்




திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்பட தமிழகத்தில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

கூட்டுறவுத்துறையின் 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மூலம் 303 மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த மருந்தகங்கள் நியாயவிலை கடைகள் போல வெளிச்சந்தைகளில் மருந்து பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் முக்கியமான சமூக பங்காற்றுகின்றன. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 60 கடைகள் வீதம் மொத்தம் 600 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியாக கூட்டுறவுத்துறை சார்பில் தமிழகத்தின் 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தார்.

70 இடங்களில்...

மாவட்ட வாரியாக கூட்டுறவு மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரியலூர்- 2 (உடையார்பாளையம், அரியலூர்), சென்னை-4 (மயிலாப்பூர், ராயப்பேட்டை, கொளத்தூர், கொடுங்கையூர்), கோயம்புத்தூர்-2 (வீரகேரளம், சரவணம்பட்டி), கடலூர்-2 (லாலாப்பேட்டை, மங்களம்பேட்டை), தர்மபுரி-2 (ஓடைப்பட்டி, கடத்தூர்), திண்டுக்கல்-2 (வத்தலகுண்டு, பூஞ்சோலை), ஈரோடு-2 (அந்தியூர், பெருந்துறை), கன்னியாகுமரி- 2 (அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு), கரூர்- 2 (வெங்கமேடு, தான்தோன்றி மலை), கிருஷ்ணகிரி- 2 (கிருஷ்ணகிரி, கட்டிக்கானப்பள்ளி). மதுரை- 2 (செக்கவூரணி, ஒத்தக்கடை), நாகப்பட்டினம்- 2 (சிக்கல், கத்திரிப்புலம்), மயிலாடுதுறை- 2 (பூம்புகார், மன்னம்பந்தல்), நாமக்கல்- 2 (வலையப்பட்டி, பரமத்தி வேலூர்), நீலகிரி-1 (மஞ்சூர்), பெரம்பலூர்- 2 (பெரம்பலூர், குன்னம்), புதுக்கோட்டை- 2 (மணமேல்குடி, கீரனூர்), ராமநாதபுரம்-2 (பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம்), சேலம்- 2 (பள்ளப்பட்டி, இளம்பிள்ளை), தஞ்சாவூர்- 2 (ஏனாதி, நாச்சிக்கோட்டை), திருச்சி- 2 (பாலக்கரை, டால்மியாபுரம்), திருநெல்வேலி- 2 (அம்பாசமுத்திரம், வள்ளியூர்), தென்காசி- 2 (தென்காசி, சங்கரன்கோவில்), திருப்பூர்- 2 (உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம்), திருவள்ளுர்- 2 (நாராம்பேடு, ஆர்.கே.பேட்டை).

திருவண்ணாமலை- 2 (களம்பூர், கீழ்பென்னாத்தூர்), திருவாரூர்- 2 (கூத்தாநல்லூர், வலங்கைமான்), தூத்துக்குடி- 1 (ஆறுமுகநேரி), வேலூர்- 2 (அணைக்கட்டு, சாத்துப்பாளையம்), திருப்பத்தூர்- 2 (மாடப்பள்ளி, திருப்பத்தூர்), ராணிப்பேட்டை- 2 (டி.கே.தங்கல், லாலாப்பேட்டை), விழுப்புரம்- 1 (கீழ்ப்பெரும்பாக்கம்), கள்ளக்குறிச்சி- 1 (உளுந்தூர்பேட்டை), விருதுநகர்- 2 (சிவகாசி, விருதுநகர்), செங்கல்பட்டு- 2 (செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவில்), காஞ்சீபுரம்- 2 (முத்தியால்பேட்டை, அமராவதிப்பட்டினம்) என மொத்தம் 70.

வரவேற்பு

இந்த கூட்டுறவு மருந்தகங்கள் இயங்கி வரும் பகுதிகளில் தனியார் மருந்து கடைகளும் போட்டியின் காரணமாக விலை குறைப்பு செய்து விற்பனை செய்து வருகின்றன. இதனால், கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் மருந்தகங்களுக்கு பொதுமக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒவ்வொரு மருந்தகத்திலும் ஒரு மருந்தாளுனர் மற்றும் உதவியாளர் பணியில் இருப்பர்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழகஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments