மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடக்கம்: அரசுடன் மக்களும் இணைந்தால் தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் மு.க.ஸ்டாலின் பேச்சு



அரசுடன் மக்களும் இணைந்தால்தான் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சுற்றுச்சூழலுக்கு கேடு

‘‘மீண்டும் மஞ்சப்பை’’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை நடத்திய விழாவில், இந்த விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சிறப்புரை வருமாறு:-

பிளாஸ்டிக் பை சுற்றுச்சூழலுக்கு கேடு என்று பரப்புரை செய்தபிறகு இப்போது துணிப்பைகளைக் கொண்டு செல்லும் பழக்கம் அதிகமாகி வருகிறது. அது மேலும் அதிகமாக வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விழிப்புணர்வுப் பயணம் ஆகும்.

வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் அளவிற்கு சுற்றுச்சூழலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, மனிதகுலத்தை மீளாத துயரத்தில் ஆழ்த்துவதாகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகக் கேடு விளைவிப்பதுதான் பிளாஸ்டிக். அதன் பயன்பாட்டை முற்றிலும் குறைத்தாக வேண்டும்.

துணிப் பை பின்னர் மக்கிவிடும். பிளாஸ்டிக் மக்காது. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்தான் இன்று சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கிறது. பிளாஸ்டிகை மண்ணில் போட்டால் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும். இதனால் மண் கெடுகிறது. மண் கெட்டால் வேளாண்மை பாதிக்கிறது. கால்நடைகளும் இவற்றை தின்று இறந்து போகின்றன. நீர் நிலைகளில் தூக்கி எறிந்தால் அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர் மாசுபடுகிறது.

மின்சாரம் துண்டிப்பு

கடல்சார் உயிரினங்கள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மடிந்து போகின்றன. அவற்றை எரிப்பதால் டையாக்சின் வேதிப்பொருள் காற்றில் கலந்து, மனிதர்களுக்கு சுவாசக் கோளாறுகள், நுரையீரல் பாதிப்புகள் எற்படுகின்றன. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் நிறுத்தியாக வேண்டும். இத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது.

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கும் தன்மையுள்ள இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதிகளை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 130 தொழிற்சாலைகளுக்கு இதுவரை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மக்களும் இணைந்து....

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பல வகையிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க மக்கள் இயக்கம் ஒன்றை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டது. அரசு மட்டுமே நினைத்தால் இதனை செயல்படுத்த முடியாது. மக்களும் இணைய வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். மஞ்சள் பையை அவமானமாகக் கருத வேண்டாம். சுற்றுச்சூழலைக் காப்பவரின் அடையாளப் பை தான் இந்த மஞ்சள் பை என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையுரை ஆற்றினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கே.ஆர்.பெரியகருப்பன், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் உதயன், சென்னையிலுள்ள ஜெர்மனி நாட்டின் துணைத் தூதர் காரின் கிறிஸ்டினா மரியா ஸ்டோல் உள்பட பலர் பங்கேற்றனர்.

விஜய்சேதுபதி குறும்படம்

முன்னதாக கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து அங்கிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதற்காக அரங்கம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பலகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

விழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு மஞ்சப்பை விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின்போது, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் சின்னத்தை பொத்தானை அழுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள விழிப்புணர்வு குறும்படத்தையும் அவர் வெளியிட்டார்.

பிளாஸ்டிக்கிற்கு அடிமை

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை மக்கள் 10 நிமிடங்கள்தான் பயன்படுத்துகின்றனர் என்றும் ஆனால் அது 4,500 ஆண்டுகளுக்கும் மேல் மக்காமல் பூமியிலேயே அடைந்து கிடந்து இயற்கை வளங்களை பாதிக்கும் என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

வரவேற்புரை ஆற்றிய சுப்ரியா சாகு, முன்பு பசுமை காணப்பட்ட இடத்தில் இப்போது பிளாஸ்டிக் உள்ளது. நாம் பிளாஸ்டிக்கிற்கு அடிமை ஆகிவிட்டோம். சாப்பாட்டில் கூட பிளாஸ்டிக் வந்துவிட்டது. 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் 10 சதவீதம் மட்டும்தான் மறுசுழற்சிக்கு வருகிறது. 86 சதவீதம் கடல் ஆமைகள், 44 சதவீதம் கடல் பறவைகள் பிளாஸ்டிக்கினால் மரணமடைகின்றன. நாட்டில் உள்ள கழிவுகளில் 60 முதல் 80 சதவீதம் பிளாஸ்டிக்தான் என்று அவர் குறிப்பிட்டார்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments