மாணவர்களின் பாதுகாப்பினை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவு
மாணவர்களின் பாதுகாப்பினை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் இணை இயக்குனர் வாசு உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

பள்ளிக்கட்டிடங்களின் உறுதி தன்மை குறித்த ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் இணை இயக்குனர் வாசு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், இணை இயக்குனர் வாசு பேசும்போது கூறியதாவது:-

பள்ளிகளில் பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும். சமக்ர சிக்ஸா திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு போக்சோ சட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே பள்ளிகளில் மாணவர்களை சரியான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்து போக்சோ சட்டத்தின் சாரம்சம் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளதா? என கண்காணிப்பு செய்திட வேண்டும்.

வருகைப்பதிவு

ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவர்களின் வருகைப்பதிவு ஒவ்வொரு நாளும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பதிவு செய்யப்படுவதை முதல்-அமைச்சர் அலுவலகம் வரை கண்காணிக்கப்படுகிறது. எனவே இதில் 100 சதவீத பதிவிற்கு ஆய்வு அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்திட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்றினால் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்கள் எவரும் விடுபடாமல் அவர்கள் மீண்டும் கல்வியினை தொடர்வற்கான முயற்சியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், குறுவள மைய அளவில் மேற்கொள்ள வேண்டும். போட்டித்தேர்வின் முக்கியத்துவம், கல்வி உதவி தொகைக்கான தேர்வுகள், அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பதற்கான இணையதள பதிவு ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஆபத்தான கட்டிடங்கள்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆபத்தான இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருக்குமாயின் உடனடியாக ஊரக வளர்ச்சித்துறையினை தொடர்பு கொண்டும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அவ்வாறான கட்டிடங்கள் இருக்குமாயின் பொதுப்பணித்துறையினை தொடர்பு கொண்டும் இடிப்பதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் பாதுகாப்பினை அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் கற்றல் இழப்பினை சரி செய்யும் திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments