திருச்சி காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு: கியாஸ் கசிந்து தீ விபத்து; 7 கடைகள் எரிந்து நாசம் டீக்கடை தொழிலாளி காயம்




திருச்சி காந்தி மார்க்கெட்டில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் டீக்கடை உள்ளிட்ட 7 கடைகள் எரிந்து நாசமாகின. இதில், டீக்கடை தொழிலாளி காயம் அடைந்தார்.

கியாஸ் கசிவால் தீ விபத்து

திருச்சி மாநகரின் மையப்பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். குறிப்பாக காலை நேரத்தில் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். காந்தி மார்க்கெட்டின் முன்புறம் டீக்கடை, பழச்சாறு கடை உள்பட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைக்கடைகளும் இயங்கி வருகிறது.

இந்தநிலையில் காந்தி மார்க்கெட்டின் பிரதான நுழைவு வாயிலின் வலதுபுறத்தில் 3-வது கடையாக ஆறுமுகம் என்பவரது டீக்கடை உள்ளது. நேற்று காலை 6½ மணியளவில் அந்த கடையில், பலகார மாஸ்டர் பரமசிவன் என்பவர் கியாஸ் அடுப்பு மூலம் வடை மற்றும் பலகாரம் தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போது சிலிண்டரில் கியாஸ் தீர்ந்து போகவே, மாற்று சிலிண்டர் எடுத்து ரெகுலேட்டரை திறந்து பரமசிவன் மாற்ற முயற்சித்துள்ளார். அப்போது கியாஸ் கசிந்து, அருகில் எரிந்து கொண்டிருந்த பாய்லர் அடுப்பின் மீது திடீரென தீ பற்றிக்கொண்டது.

தொழிலாளி காயம், பெண் மயக்கம்

பின்னர் கடை முழுவதும் மள மளவென தீ பரவ தொடங்கியது. இதில், பலகார மாஸ்டர் பரமசிவன் மீது தீப்பிடித்து லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பி வெளியே ஓடிவந்தார். பின்னர் அந்த தீ அருகில் உள்ள 6 கடைகளுக்கும் பரவியது.

அப்போது காந்தி மார்க்கெட்டை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பெண் பணியாளர் ஒருவர், கடைகள் தீப்பற்றி எரிவதை கண்டு அங்கேயே மயங்கி விழுந்தார். அத்துடன் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்தவர்களும் நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். தீயினால் ஏற்பட்ட கரும்புகை 200 அடி உயரத்துக்கு மேல் சென்று புகை மண்டலமாக காட்சி அளித்தது.

7 கடைகள் எரிந்து நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தினர் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் கருணாகரன், நிலைய அதிகாரி மல்கியூராஜா ஆகியோர் தலைமையில் 3 வண்டிகளில் 17 வீரர்களுடன் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதலாவதாக அனைத்து கடைகளிலும் உள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கியாஸ் சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் முழுமையாக 5 கடைகளும், பகுதியாக 2 கடைகளும் சேதமாகின.

ரூ.10 லட்சம் சேதம்

இந்த தீ விபத்து குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தீ விபத்தால் 7 கடைகளிலும் உள்ள சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் காந்தி மார்க்கெட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டார். அப்போது 7 கடைகளின் உரிமையாளர்களும் தங்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர். இதேபோல, கலெக்டர் சிவராசுவிடமும் மனு அளிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments