வடமாநில ரெயில்கள் மாவட்ட தலைநகரம் ராமநாதபுரத்தில் நிற்காததால் பயணிகள் ஏமாற்றம்


ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர், அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் நிற்காததால் பயணிகளும், பக்தர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ராமநாதபுரம், 
ராமேசுவரத்தில் இருந்து அஜ்மீர், அயோத்தி, வாரணாசி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் நிற்காததால் பயணிகளும், பக்தர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

ஏமாற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முதல் மதுரை வரையிலான ரெயில்பாதை அகலரெயில்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த பணிகள் தொடங்கும் முன்னர் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டால் வடமாநிலங்களை இணைக்கும் வகையில் பல ரெயில்கள் விடப்படும் என்றும் புண்ணியதலமான ராமேசுவரம் மட்டுமின்றி தொழில் துறையின் பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்டமே முன்னேறிவிடும் என்று கூறப்பட்டது. 
இதனால் மகிழ்ந்திருந்த பயணிகளுக்கு இன்றுவரை ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. வடமாநிலங்களை இணைக்கும் வகையில் ஒரு சில ரெயில்கள் மட்டுமே இயக்கப் பட்டுள்ளதோடு சென்னைக்கு கூடுதல் ரெயில்களோ, பகல் நேர ரெயில்களோ விடப்படவில்லை.

தவிப்பு 

குறிப்பாக வடமாநிலங்களை இணைக்கும் வகையில் ராமேசுவரம்-பைசாபாத் ரெயில், ராமேசுவரம்- அயோத்தி ரெயில், ராமேசுவரம் - பனாரஸ் ரெயில், ராமேசுவரம்-அஜ்மீர் ரெயில் போன்றவை விடப்பட்டன. இந்த ரெயில்கள் விடப்பட்டபோதிலும் இதனால் ராமநாதபுரம் பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலையே உள்ளது. ஏனெனில் இந்த ரெயில்கள் அனைத்தும் ராமேசுவரத்தில் கிளம்பி மானாமதுரையில் தான் அடுத்த நிறுத்தம் என வரையறுக்கப்பட்டு உள்ளது.

இதனால் ராமநாதபுரத்தில் மேற்கண்ட ரெயில்களில் மக்கள் ஏறமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்த ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ராமேசுவரம் அல்லது மானாமதுரைக்குதான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்காக விடப்பட்ட ரெயில் மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் நிற்காதது வேதனை அளிப்பதாக உள்ளது.
 
வேதனை

கொரோனா காலத்திற்கு முன்னர் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காலம் முடிந்து நிறுத்தப்பட்ட ரெயில்கள் விடப்பட்டுள்ள நிலையிலும் இன்றளவும் ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் நிற்க நடவடிக்கை எடுக்கப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது. 

எனவே, உடனடியாக மேற்கண்ட ரெயில்களை ராமநாதபுரம் ரெயில்நிலையத்தில் நின்று செல்லுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்போதுதான் புண்ணியதலங்களை கொண்ட ராமநாதபுரம் மாவட்ட பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் பயன் உள்ளதாக அமையும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments