அம்மாப்பட்டிணத்தில்: இடிந்துவிழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி - அச்சத்தில் மக்கள்!






சிமென்ட் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு, சில இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே இருக்கிறது அம்மாபட்டினம் கிராம். இங்கு 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அம்மாபட்டினம் கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 1984-ல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலைக் குடிநீர்த் தேக்கத் தொட்டி அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடு நிலைப்பள்ளி அருகே கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இந்தத் தொட்டியிலிருந்து அம்மாபட்டினம் பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்தது. இதற்கிடையே மூன்று இடங்களில் புதிதாக மேல்நிலைத் தொட்டி வந்த பிறகு, இந்தத் தொட்டியின் தேவை குறைந்துபோனது. ஆனாலும், தற்போது இந்தத் தொட்டியிலிருந்து குறிப்பிட்ட சில பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. இந்த நிலையில்தான், கடந்த 37 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் நிலை மோசமாக இருக்கிறது.

சிமென்ட் தூண்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதோடு, சில இடங்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருக்கின்றன. அருகிலேயே நடு நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி இருப்பதால், இந்தத் தொட்டி இடிந்து விழுந்தால் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான இந்தத் தொட்டியை விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு உடனே இடித்து அகற்ற வேண்டும் என்று அம்மாபட்டினம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறனர்.

இது பற்றி அம்மாபட்டினத்தைச் சேர்ந்த ஜலிலி அஸீஜ் கூறும்போது, ``எங்க பகுதி மக்களுக்கு ரொம்பவே பயன்பட்டுக்கிட்டு இருந்த குடிநீர்த் தொட்டி சிதலமடைஞ்சு போயிருச்சு. தொடர்ச்சியா தண்ணீர் ஓவர் புல்லாகி ஈரமாகி, ஈரமாகி சிமென்ட் பூச்சு எல்லாம் கொட்டிக்கிட்டு வருது. 6 தூண்கள்ல 4 தூண்கள்ல சிமென்ட் காரைகளெல்லாம் கொட்டிப்போய் வெறும் கம்பி மட்டும்தான் தெரிஞ்சுக்கிட்டு இருக்கு. பேஸ்மன்ட் வீக்காகிட்டே வருது. எப்ப இடிஞ்சு விழும்னே சொல்ல முடியாத நிலையிலதான் இருக்கு. இந்தத் தொட்டியைச் சுத்திலும் ஒருபக்கம் அரசு ஆண்கள் பள்ளி கட்டடம், மற்றொரு பக்கம் அங்கன்வாடிக் கட்டடம், நூலகம், ரேஷன்கடைன்னு நெறைய இருக்கு. ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுகொண்ட பெரிய தொட்டி, இது விழுந்தா சுற்றிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக, பள்ளி பிள்ளைங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாதுன்னுதான் பாதுகாப்பா இந்தத் தொட்டியை இடிக்கணும்னு ரொம்ப நாளா போராடிக்கிட்டு இருக்கோம். ஆனா, நிதி இல்லைன்னு சொல்லித் தட்டிக்கழிச்சாங்க. இப்போ கொஞ்ச நாளுக்கு முன்னால ஆய்வு செஞ்சுக்கிட்டு விரைவிலேயே இடிச்சிருவோம்னு, இழுவையா சொல்லிட்டுப் போயிருக்காங்க. ஆனா, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனா, இப்போ நிலைமை தெரிஞ்சும் ஊராட்சி சார்பில் முழுக்கொள்ளவுக்குத் தொடர்ந்து தண்ணீரை ஏற்றி எங்களைப் பீதியடையவெச்சிருக்காங்க. தண்ணீர் சப்ளைக்கு சரியான ஆளை நியமிக்காததால எல்லா தொட்டிகள்லயும் தண்ணீர் ஓவர் புல்லாகி வீணாகிக்கிட்டு இருக்கு. எங்க பிள்ளைகள் தினமும் பயத்தோடதான் பள்ளிக்கூடம் போயிக்கிட்டு, வந்துக்கிட்டு இருக்குங்க" என்றார் ஆதங்கமாக.

இது பற்றி ஊராட்சித் தலைவர் அகமது தம்பியிடம் கேட்டபோது, ``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், மராமத்து செய்தால், இன்னும் சில காலங்களுக்குப் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டுச் சென்றனர். அதன்பேரில் தொடர்ந்து பயன்பாட்டிலிருந்துவந்தது, இங்கிருந்து மூன்று பகுதிகளுக்கு தண்ணீர் செல்கிறது. மக்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியமும் உள்ளது. சமீபத்தில் ஆய்வுசெய்த அதிகாரிகள் விரைவில் இடிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றனர். இனி இந்தத் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்படுவது தவிர்க்கப்படும்" என்றார்.

இந்த நீர்நிலைத் தொட்டி விவகாரம் தொடர்பாக மணமேல்குடி பி.டி.ஓ தமிழ்செல்வனிடம் பேசினோம். ``சமீபத்தில் மணமேல்குடி பகுதி முழுவதுமுள்ள பழுதடைந்த கட்டடங்கள் குறித்து செயற்பொறியாளர்கள் ஆய்வு செய்து இடிப்பதற்கான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில், இந்தத் தொட்டியும் ஒன்று. இந்தக் கோப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கின்றன. இந்தக் கட்டடத்தின் நிலை குறித்து தகவல் கொடுத்திருக்கிறோம். தொட்டியில் தண்ணீர் ஏற்றாமல் இருக்கவும், மாற்றுவழியில் குடிநீரைக் கொடுக்கவும் ஊராட்சித் தலைவரிடம் வலியுறுத்தியிருக்கிறேன். மிக விரைவிலேயே இடித்து அகற்றப்பட்டும்" என்றார்.

எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதற்கு முன்னே இந்த நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றவேண்டியது அரசின் கடமை!

நன்றி : விகடன்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments