கீரமங்கலம் பேரூராட்சி ஒரு பார்வை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பகுதி கீரமங்கலம் பேரூராட்சி. இதில் நகர பகுதிகளைவிட கிராம பகுதிகள் அதிகம். கொடிக்கரம்பை, ஆலடிக்கொல்லை, கீரமங்கலம் மேற்கு, வடக்கு, காசிம்புதுப்பேட்டை என கிராமங்கள் சார்ந்த பகுதியாக உள்ளது. மலர்கள், காய்கனி, மிளகாய் உள்ளிட்ட உற்பத்தியும் விற்பனை சந்தைகளும் உள்ளது. மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் சுவாமி கோவிலும், அதன் முன்பு உள்ள தடாகத்தில் 84 அடி உயர பிரமாண்ட சிவன் சிலையும், எதிரே தலைமை புலவர் நக்கீரருக்கு சிலையும் அமைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் மக்களும் அதிகம் வந்து செல்லும் ஊராக உள்ளது.

15 வார்டுகள்
கீரமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 7 வார்டுகள் பொது, 7 வார்டுகள் பெண், 1 வார்டு தனி (பெண்) என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 வார்டுகளில் பெண் வேட்பாளர்களுக்கும், 7 வார்டுகளில் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 3,907 ஆண் வாக்காளர்களும், 4,049 பெண் வாக்காளர்கள் என 7,956 வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னாள் தலைவர்கள்
1975-க்கு பிறகு அச்சகம் ராஜகோபால், அருணாசலம், நடனசபாபதி, துரை, ஜானகி, தனலெட்சுமி என பலர் பொறுப்பில் இருந்துள்ளனர்.
பலத்த போட்டி
இதுவரை காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. வினர் மாறி மாறி பேரூராட்சி தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு வார்டுகளை ஒதுக்கியுள்ள நிலையில,் மீதமுள்ள 12 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
அ.தி.மு.க.  தனித்து களம் காண்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க.வும் தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் பலத்த போட்டி நிலவுகிறது. மேலும் தங்கள் கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத சிலர் சுயேட்சையாகவும் போட்டியிட  உள்ளனர்.
நீண்ட கால பிரச்சினை
சுற்றியுள்ள பல கிராமங்களின் மைய பகுதியாக உள்ள கீரமங்கலத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் இருந்த திங்கள் சந்தை கொஞ்சம், கொஞ்சமாக காணாமல் போய் தற்போது சந்தை கூடுவதில்லை. மாறாக பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், பிளாஸ்டிக் திடக்கழிவுகளை சந்தை கூடும் இடத்தில் கொட்டி மலை போல குவிக்கப்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர். தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றினாலும் சந்தையில் கொட்டப்பட்ட குப்பைகள் அப்படியே உள்ளது. நீண்ட காலமாக நிரந்தரமாக குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்ய முடியாமல் உள்ளது. 
கோரிக்கைகள்
கீரமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கனி, மலர்கள் உற்பத்தி அதிகம் உள்ளதால் குளிரூட்டப்பட்ட பதனீட்டு நிலையம் அமைக்கவும், கீரமங்கலத்தை மையமாக வைத்து தனி தாலுகா, ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். மூடப்பட்ட வாரச்சந்தையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சாலைகள் சீரமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments