வடகாடு சுற்றுவட்டார பகுதியில் ஆன்லைன் நெல் கொள்முதலில் குளறுபடி; விவசாயிகள் அதிருப்தி




வடகாடு சுற்று வட்டார பகுதியில் ஆன்லைன் நெல் கொள்முதலில் குளறுபடியால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
நெல் கொள்முதல் நிலையம்
வடகாடு சுற்று வட்டார பகுதியில் ஆழ்குழாய் மற்றும் ஆற்று பாசனம் மூலமாக, தாளடி சம்பா நெல் பயிரிட்டு இருந்தனர். இந்நிலையில், நெல் மணிகள் விலைந்ததால் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 69 இடங்களில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதற்கான கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. 

ஆனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மணிகளை ஆன்லைன் பதிவேற்றம் செய்த பிறகுதான் வாங்க வேண்டும் என்று அரசு அதிகாரிகள் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர். ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதில் காலதாமதம் ஆவதால் நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடிகள் நடந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். 
ஆன்லைன் குளறுபடி 
ஏற்கனவே ஆன்லைனில் நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நெல் கொள்முதல் செய்வதில் மேலும் தாமதம் ஆவதால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைத்திருக்கும் நெல் மணிகள் மழை மற்றும் பனியால் வீணாகும் சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலமாக, தனியார் நெல் கொள்முதல் நிலைய முதலாளிகள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை கொள்முதல் செய்ய வாய்ப்பு உருவாகும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. 
இதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிருப்தி அடைந்த நிலையில் இருந்து வருகின்றனர். இதனால் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆன்லைன் பதிவேற்றத்தை தடுத்து நிறுத்தி பழைய முறையிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments