விராலிமலை அருகே அரசு பஸ்கள் மோதல்; 10 பேர் படுகாயம்





விராலிமலை அருகே அரசு பஸ்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் படுகாயமடைந்தனர்.

அரசு பஸ்கள் மோதல்

திருச்சியில் இருந்து விராலிமலைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ், விராலிமலை அருகே உள்ள இராசநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை இறக்கி கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக டவுன் பஸ்சின் பின்னால் மோதியது.

இதில் பஸ்சில் பயணம் செய்த விராலிமலையை சேர்ந்த குழந்தைவேல், சஞ்சய்குமார், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்த சாந்தி, தனபாக்கியம், பரகத் நிஷா, குர்ஷித்பானு, அன்னவாசலை சேர்ந்த ரம்ஜான்பேகம் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான அரசு பஸ்கள் கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சாலை விபத்தில் காயமடைந்தவர் சாவு

* விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 43). இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ராமகவுண்டம்பட்டியிலிருந்து காளப்பனூருக்கு செல்ல திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகசுந்தரம் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனினிற் நேற்று உயிரிழந்தார்.

விஷப்பூச்சி கடித்து விவசாயி சாவு

* அறந்தாங்கி அருகே உள்ள சிட்டாங்காட்டை சேர்ந்தவர் சிவலிங்கம் (80). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது அவரது காலில் விஷப்பூச்சி கடித்து விட்டதாக தெரிகிறது. அவரை உறவினர்கள், சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிவலிங்கம் இறந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments