புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பாதுகாப்பு ஆணையர் நாளை ஆய்வு
புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி ரெயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததையொட்டி ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மின்மயமாக்கல்

புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த மின்மயமாக்கல் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நாளை (வியாழக்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

திருச்சியில் இருந்து நாளை காலை 9 மணிக்கு ஆய்வு ரெயில் புறப்பட்டு வருகிறது. வருகிற வழியில் ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட்டுகள், பாலங்கள், மின்பாதைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதன்பின் காரைக்குடியில் இருந்து மாலை 3.30 மணிக்கு மின்சார என்ஜின் பொருத்திய ரெயில் புதுக்கோட்டை வழியாக திருச்சி வரை சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த சோதனை ஓட்டம் நடைபெறும்போது பொதுமக்கள் யாரும் தண்டவாள பாதை அருகே வர வேண்டாம், தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என ரெயில்வே தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்ட மேலாளர் ஆய்வு

இதற்கிடையே மின்மயமாக்கல் பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் தொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை ரெயில் நிலையத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். மின்சார என்ஜினை பொருத்தி சோதனை நடத்தும்போது அதிவேகமாக ரெயில் இயக்கப்படும். திருச்சிக்கு மாலை 4.40 மணிக்கு சென்றடையும். பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின் அனுமதி வழங்கிய பின் இந்த வழித்தடத்தில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தி ரெயில் இயக்கப்படும். இதன்மூலம் திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி இடையே ரெயில் பயண நேரம் சற்று குறைய வாய்ப்பு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments