புதுக்கோட்டையில் துணிகரம்:திருமண வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு




புதுக்கோட்டை பெரியார்நகரில் டபுள் ரோட்டில் வசித்து வருபவர் மனோன்மணி (வயது 67). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சின்னதுரையை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினரின் 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மனோன்மணியுடன் வசித்து வருகின்றனர். மகன் பாரதிராஜா கனடா நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் மனோன்மணியின் மகள் வெண்ணிலாவுக்கு நேற்று காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் காரைக்குடி சென்றனர். திருமணம் முடிந்த பின்பு நேற்று மாலை மனோன்மணி அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.
கதவின் பூட்டு உடைப்பு
வீட்டிற்குள் நுழைந்ததும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டினுள் அறைகளும், பீரோக்களும் திறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். பூஜை அறை உள்பட ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து அவர்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. நாய் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரதான சாலை வரை சென்று நின்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
70 பவுன் நகைகள் கொள்ளை
போலீசாரின் விசாரணையின் போது வீட்டில் மகள் திருமணத்திற்காக 70 பவுன் நகைகள் வரை வைத்திருந்ததாகவும், அவை கொள்ளைபோனதாக மனோன்மணி தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு நகைகளை எடுத்து செல்லவில்லையா? என அவரிடம் போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது திருமணத்தின் போது கவரிங் நகைகள் அணிந்திருந்ததாகவும், தங்க நகைகள் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனரா? என போலீசார் விசாரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மனோன்மணியின் குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் கொள்ளைபோன நகைகளின் விவரங்களை மனோன்மணி குடும்பத்தினரிடம் போலீசார் கேட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் மனு பெற்றபின் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
வீட்டின் முன்பு வாழைத்தார்கள், பந்தல் போடப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த காட்சிகள் பதிவாகக்கூடிய கருவியை மர்மநபர்கள் கழற்றி சென்றனர். இதனால் மர்மநபர்களை அடையாளம் காணுவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நகைகள் கொள்ளைபோன வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் 70 பவுன் நகைகள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments