புதுக்கோட்டையில்அசைவ ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனைகெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்; அபராதம் விதிப்பு




புதுக்கோட்டையில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒரு ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 46 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட ஒருவர் பலியானது அந்த உணவு சாப்பிடுபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

மேலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் இறைச்சிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சிக்கன்களுக்கு மசாலாப்பொடி தடவி சமைத்த பின்பு பிரிட்ஜில் வைத்திருந்ததும் தெரிந்தது. இவை கெட்டுப்போன இறைச்சிகள் என்பதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இறைச்சிகள் பறிமுதல்
இந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘அசைவ ஓட்டல்களில் உணவுகள் பாதுகாப்பான முறையில் தயாரித்து விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டதால் இந்த சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 25 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஷவர்மா கடைகள் பல புதுக்கோட்டையில் மூடப்பட்டு விட்டது. ஒரு சில கடைகள் மட்டும் இன்னும் இயங்கி வருகிறது. அவர்களும் அதனை எப்படி முறையாக தயாரித்து விற்பனை செய்வது பற்றி தெரியாமல் அரை, குறையாக செய்து வருகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 
தற்போது நடைபெற்ற சோதனையில் விதிகளை மீறியதாக கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை ஓட்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும். அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்டவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதில் அந்த உணவகத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி தீர்ப்பளிப்பார்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments