புதுக்கோட்டை பச்சலூர் அரசுப் பள்ளியை தயார்படுத்தும் பணி தீவிரம்: முதல்வர் வருவார் என எதிர்பார்ப்பு
புதுமைப் பள்ளியாக திகழும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் வராலாமென்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் கட்டிடங்களுக்கு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அறந்தாங்கி அருகே மாங்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தி முன்மாதிரி பள்ளியாக மாற்றிய அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதிமணி, அங்கிருந்து கடந்த 2019-ல் பச்சலூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதலில் சென்றார்.

அங்கு, சுமார் இரண்டரை மாதத்துக்குள் மக்கள் பங்களிப்பு, அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி அனைத்து வகுப்பறைகளிலும் ஏசி, ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட வசதிகள் சுமார் ரூ.25 லட்சத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கிராமத்தினரும் வந்து பள்ளியை பார்வையிட்டு செல்கின்றனர். டெல்லி-க்கு சென்று முன்மாதிரி பள்ளியை பார்வையிட்டு வந்த தமிழக முதல்வர், ஜூன் 8-ம் தேதி புதுக்கோட்டைக்கு வரும்போது தமிழகத்தில் முன்மாதிரியாக செயல்படும் பச்சலூர் பள்ளியையும் பார்வையிட வேண்டும் என தமிழக முதல்வரும் அப்பள்ளியின் மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து சமூக வலைதளங்களிலும் வீடியோக்கள் வைரலானது. இதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமையிலான கல்வித் துறையினர் பள்ளியை அண்மையில் ஆய்வு செய்து பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கையை ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். அதன்பிறகு, கடந்த சில நாட்களாக பள்ளியின் சுற்றுச்சுவர், வகுப்பறைகள் உட்பட பள்ளி வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு தினமும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர். பராமரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.இது குறித்து கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது: "ஜூன் 8ம் தேதி புதுக்கோட்டை வரவுள்ள முதல்வர் பச்சலூர் அரசு பள்ளிக்கும் வரலாம் என தகவல் கிடைத்தது. அதற்கேற்ப ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் பள்ளியை பார்வையிட்டு வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் வசதிகள், மாணவர்களின் செயல்பாடுகள், ஆசிரியர்களின் கற்பித்தல், வளாகத்தின் தூய்மை, மாணவர்களின் ஒழுக்கம் குறித்து விரிவான அறிக்கை ஆட்சியரின் வழியாக தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

விரிவான தகவல்களை கையில் வைத்திருக்குமாறு மேலலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், முதல்வர் வருவது குறித்து இறுதியான தகவல் இதுவரை ஏதும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்று கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments