வடகாடு சுற்றுவட்டார பகுதியில் சீமைக்கருவேலம்-தைல மரங்களை வெட்டி அகற்ற கோரிக்கை




வடகாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தைல மரக்காடுகளை வெட்டி அகற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீமைக்கருவேலம்-தைல மரங்கள்

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகளவில் தைலமரங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தைல மரங்கள் வெயில் காலங்களில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழ்வதால் அதிகப்படியான அளவில் வெப்பம் ஏற்படுவதோடு வெப்ப காற்றை வெளிப்படுத்தி மழை மேகங்களையும் கலைந்து போக செய்து விடுவதாக கூறப்படுகிறது. இதனால் போதிய மழையின்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடும் அதன் சுற்று வட்டார கிராமங்களும் ஒன்றாகும். இது ஒரு புறம் இருக்க ஏரி மற்றும் ஆற்று பாசன பகுதி மற்றும் குளம், குளக்கரை பகுதிகளில் அதிகளவில் மண்டி கிடக்கும் சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி குடிப்பதில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஊர்களில் உள்ள குளங்கள் அனைத்தும் வற்றி வானம் பார்த்த பூமியாக இருந்து வருகிறது.

நிலத்தடி நீர்மட்டம் குறைவு

குளங்கள் வற்றி போனதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக விவசாயிகள் குறை கூறி வருகின்றனர். மேலும் இப்பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் ஏரிகள் தூர் வாரப்படாத காரணங்களால் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின்னர் வந்த காட்டாற்று தண்ணீரை கூட சேமித்து வைக்க முடியாமல் தண்ணீர் வீணாக போனதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கொஞ்சம் நஞ்சம் குளங்களில் தேங்கி நின்ற தண்ணீரையும் சீமைக்கருவேல மரங்கள் கபளீகரம் செய்து விட்டதால் தற்சமயம் குளங்கள் அனைத்தும் பொட்டல் காடாக விளங்கி வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய இந்த சீமைக்கருவேல மரங்களை அடியோடு அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றங்கள் அவ்வப்போது அறிவுரை வழங்கினாலும் அதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்று சுற்றுச்சூழல், வன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தைல மரக்காடுகளுக்கு பதில் சந்தனம் மற்றும் செம்மரம் உள்ளிட்ட பல்லுயிர் காடுகளை வளர்ப்பதின் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி அரசுக்கும் அதிகளவில் வருமானமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சீமைகருவேல மரங்கள் மற்றும் தைல மரக்காடுகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments