‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகம் வாசித்து சாதனை




‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்.

‘புதுக்கோட்டை வாசிக்கிறது’

புதுக்கோட்டையில் 5-வது புத்தக திருவிழா ஜூலை மாதம் 29-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வரை நகர்மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி புத்தக திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக அனைத்து பள்ளிகளிலும் புத்தக வாசிப்பு திருவிழா ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மற்றும் மாவட்ட கலெக்டர், பணியாளர்கள் கலந்துகொண்ட ‘புதுக்கோட்டை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

3 லட்சத்திற்கும்...

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட 1,061 தொடக்கப்பள்ளிகள், 290 நடுநிலைப்பள்ளிகள், 112 உயர்நிலைப்பள்ளிகள், 107 அரசு மேல்நிலைப்பள்ளிகள், உதவிபெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,967 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 150 அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிமன்ற அலுவலகம், பொது நூலகம், கிராம சேவை மையம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் 14 ஆயிரத்து 457 நபர்கள் பங்கேற்று புத்தகங்களை வாசித்தனர்.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி முத்துநிலவன், தங்கமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆவுடையார்கோவில், ஆவூர்

ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாசிப்பு என்ற எழுத்து வடிவில் அமர்ந்து பாடப்புத்தகம் அல்லாத பிற நூல்களை வாசித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், தமிழாசிரியர் குமார், செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊர்புற நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வின்சென்ட் தாஸ், நூலக வாசகர் வட்ட தலைவர் சேவியர், ஆவூர் அரசு கால்நடை உதவி மருத்துவர் பெமினா பானு, கால்நடை மருத்துவமனை ஆய்வாளர் முருகபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் நூல்களை வாசித்தனர். முடிவில் நூலகர் நாகலட்சுமி நன்றி கூறினார்.

அவ்வையார், பாரதியார் வேடம்

கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதி ஊராட்சி மணமடை காலனியில் செயல்பட்டுவரும் இல்லம் தேடி கல்வி மாணவ-மாணவிகள் அவ்வையார், பாரதியார் வேடமணிந்து புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அவ்வையார் பாடல்கள், பாரதியின் கவிதைகளை கூறி வாசிப்பு பழக்கத்தை வளர்த்து கொள்வதின் அவசியம் குறித்தும், புத்தகம் வாங்குவதால் பெறும் பயன்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் விளக்கி கூறினர்.

பொன்னமராவதி அருகே பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார். இதில் மாணவிகள் கையில் புத்தகம் ஏந்தி பாடங்களை வாசித்தனர்.

இந்திய வரைபடம்

அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்திய வரைபடம் போன்று அமர்ந்து மாணவிகள் புத்தகங்களை வாசித்தனர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். விழாவில் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாசிப்பின் அவசியம் குறித்து எடுத்து கூறினார்கள். அப்போது புத்தகங்கள் நம்முடைய நண்பன் எனவும், அது ஒரு சிறந்த வழிகாட்டி எனவும், புகழ்பெற்ற அறிஞர்கள் யாவும் புத்தக பிரியர்களாக இருந்திருக்கிறார்கள் என்று கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments