பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அதிக கவனம் செலுத்தப்படும்-புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பேட்டி




    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்படும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே கூறினார்.


புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த நிஷா பாா்த்திபன், மத்திய அரசு பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மாலை புதுக்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, செரீனாபேகம், போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்பட அதிகாரிகள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் போலீசாருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டனர்.

சட்டம்- ஒழுங்கு

இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எனது சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஆகும். ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தது 2011-ம் ஆண்டு ஆகும். நான் போலீஸ் பணியில் முதலில் சிவகாசியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். அதன்பின் சிவகங்கையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். அதன்பிறகு பட்டாலியன், பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றி உள்ளேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு நிலைநாட்டப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க அதிக கவனம் செலுத்தப்படும். போதைப்பொருட்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். என்னுடைய 94899 46674 என்ற செல்போன் எண்ணிற்கு பொதுமக்கள் எந்த தகவலையும் தெரிவிக்கலாம். வாட்ஸ்-அப்பிலும் புகைப்படம், ஆடியோ அனுப்பலாம்.

கஞ்சா விற்பனை

நான் பணியாற்றிய இடங்களில் நேர்மையாக வேலை பார்த்தேன். அதேபோல் முழு அர்ப்பணிப்போடு பணியாற்றுவேன். குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசாருடன் ஆலோசனை நடத்தி புள்ளிவிவரங்கள் சேகரித்து அதனை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்படும். கண்டுபிடிக்கப்படாமல் உள்ள குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா விற்பனை உள்பட எந்தவிதமான புகார், தகவலாக இருந்தாலும் என்னுடைய செல்போன் எண்ணிற்கு யார் வேண்டுமானாலும் நேரிடையாக தகவல் அளிக்கலாம். தகவல் அளிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

50-வது போலீஸ் சூப்பிரண்டு

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 1974-ம் ஆண்டு முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 49 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றியுள்ளனர். தற்போது 50-வது போலீஸ் சூப்பிரண்டாக வந்திதா பாண்டே பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments