புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அகற்றப்படுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அகற்றப்படுவது எப்போது? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தைல மரங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த தைல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் சிலர் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக தைல மரங்களை நடக்கூடாது. ஏற்கனவே உள்ள தைல மரங்களை அகற்றவும் சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தைல மரங்கள் அகற்றப்படுவது எப்போது? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தைல மரங்களை நடக்கூடாது என ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதன்பிறகு மாவட்டத்தில் புதிய தைல மரங்கள் நடப்படவில்லை.

நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

மாவட்டத்தில தைல மரங்கள் அனைத்தும் வனத்தோட்ட கழகம் மற்றும் தனியார்களிடம் உள்ளது. ஒரு தைல மரக்கன்று நடும் போது அது 4 நான்கு ஆண்டுகளில் நன்கு வளர்ந்து விடும். அதனை அறுவடை செய்யும் போது வேரோடு ஒரு அடி உயரத்திற்கு மட்டும் விட்டுவிடுவது உண்டு. அதில் இருந்து மீண்டும் துளிர் விட்டு மரம் வளரும். இவ்வாறு 2 முறை மட்டும் வளர்த்து வெட்டி பயன்படுத்த வேண்டும். ஆனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 3 முறை வெட்டி அறுவடை செய்த பிறகும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரங்களுக்கு தண்ணீர் பாசனமாக அதன் அருகே சுமார் 2 அடி முதல் 3 அடிக்கு தோண்டப்பட்டு பாத்தி போல் அமைக்கப்படுகிறது. மேலும் சிறிய குளம் போலவும் அமைத்து அதில் இருந்து தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இவ்வாறு அமைப்பதின் மூலம் மழை பெய்தால் தண்ணீர் அந்த இடத்தில் மட்டுமே தேங்கி நிற்பதோடு, தரையில் பாய்ந்து மற்ற இடங்களுக்கும், ஆறுகளுக்கும் செல்வதில்லை. இதனால் தான் நிலத்தடி நீர்மட்டம், விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே இனியாவது விவசாயம் செழிக்க இந்த தைல மரங்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். இதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து வனத்தோட்ட கழக வட்டாரத்தில் விசாரித்த போது, கோர்ட்டு உத்தரவு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் முடிவு செய்து அறிவிப்பார்கள் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments