லாரி வாடகைக்கு இணையாக அரசு பஸ்களின் மூலம் சுமைகளை அனுப்பும் சேவை எண்கள் அறிவிப்பு




தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களில் உள்ள உபயோகப்படுத்தப்படாத சுமை பெட்டிகளை மிகவும் குறைந்த கட்டணத்தில் மாத, தினசரி வாடகைக்கு விட திட்டமிடப்பட்டு அது தொடர்பான அறிவிப்பினை கடந்த மே 5-ந் தேதி போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது போக்குவரத்துத் துறை அமைச்சரால் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக அனுப்பிட ஏதுவாக, பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் தினசரி பொருட்களை 2 ஊர்களுக்கு இடையே அனுப்பிவிடும் வகையில், பஸ்சில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி உபயோகித்துக் கொள்ளும் திட்டம் கடந்த 3-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் 18 சுமைகள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. எனவே, சிறு-பெரு வியாபாரிகள், வணிகர்கள், முகவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள அருகில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற கீழ்க்கண்ட செல்போன் எண்கள் மற்றும் கிளை அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை, தலைமையகம் -9445014416/9445014424, கோயம்பேடு பஸ் நிலையம்-9445014452/9445017793, மதுரை பஸ் நிலையம்-9445017791, நாகர்கோவில் பஸ் நிலையம் - 9445014425, திருச்சி பஸ் நிலையம் - 9445014421/9445014446 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் திருச்சி-9445014422 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments