அடேங்கப்பா! 101 தட்டு தாம்பூல சீர்வரிசையோடு வந்த உறவினர்கள்.. மதத்தை கடந்து பங்கேற்ற இஸ்லாமியர்கள்

    ஆலங்குடி அருகே காதணி விழாவிற்கு 101 வகையான தட்டுத் தாம்பூலங்களில் சீர்வரிசையோடு வந்ததை ஊர் மக்களே வியந்து பார்த்தனர். நமது தமிழ் கலாசாரத்தில் திருமணம் தொடங்கி பல்வேறு நிகழ்வுகளுக்கும் சொந்த பந்தங்கள், ஊர் மக்கள் வெகு விமர்சிக்கச் சீர் கொடுப்பார்கள். நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் இந்த சீர் கொடுக்கும் முறை இன்னும் கூட பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய பழக்கமாகவே தொடர்ந்து வருகிறது.
சீர்வரிசை
இந்நிலையில், ஆலங்குடி அருகே காதணி விழாவிற்கு மயிலாட்டம், கரகாட்டம் எனப் பாரம்பரிய ஆட்டங்களுடன் அசத்தலாகச் சீர்வரிசையைக் கொடுத்துள்ளனர் உறவினர்கள். மொத்தம் 101 வகையான தட்டுத் தாம்பூலங்களில் சீர்வரிசையோடு வருகை தந்த தாய் மாமன்களை கண்டு ஊர் மக்களே வியந்து போய்விட்டனர். அதிலும் இந்து இல்ல காதணி விழாவிற்கு இஸ்லாமிய மக்களும் சீர்வரிசை எடுத்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியா குமார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், மூவருக்கும் இன்றைய தினம் நெடுவாசல் கிழக்கு சிவன் கோவிலில் வைத்துக் காதுகுத்து நடைபெற்றது. விழா வெகு விமரிசையாக நடந்த இந்த விழாவிற்கு வந்த குழந்தைகள் தாய் மாமன்கள், நாட்டியக் குதிரைகள் நடனமாட அதன்மீது அமர்ந்தவாறு கம்பீரமாக வந்து இறங்கினர்.

101 தட்டுக்கள்

அதேபோல பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளங்கள் எனத் தமிழ் பாரம்பரிய நடனங்களும் இதில் மிஸ் ஆகவில்லை. பலத்த ஆரவாரத்தோடு 101 தட்டுகளில் தங்க நகைகள், பழங்கள், ஆடைகள் எனப் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசைகளைச் சுமந்து வந்த உறவினர்கள், நெடுவாசல் கடைவீதியில் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாகவே வந்தனர்.

இஸ்லாமியர்கள்
ஊரே வியக்கும் வகையிலான சீர்வரிசைகளோடு வந்த தாய் மாமன்களை விழாதாரரும் அவரது அவரது குடும்பத்தினரும் சந்தனமிட்டும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். இந்த விழாவுக்கு இஸ்லாமிய மக்களும் சீர்வரிசைத் தட்டுகளை எடுத்து வந்தனர். விழாவிற்கு வந்திருந்த இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையாக நகைகளைக் காதணிச் செல்வங்களுக்கு அணிவித்து மகிழ்ந்தனர். அவர்களை நெடுவாசல் கிராம மக்கள் சந்தனமிட்டு வரவேற்று உபசரித்தனர்.

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் நாம் உறவுகளை மறந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தொன்மை மாறாமல் பாரம்பரிய முறைப்படி ஆட்டம் பாட்டத்துடன், சீர்வரிசை கொண்டு வந்த உறவினர்களை ஊரே வியந்து பாராட்டி வருகிறது. இந்து இல்ல விழாவில் சாதி, மத பேதமின்றி சீர்வரிசை எடுத்து வந்து இஸ்லாமியர்கள் கலந்து கொள்வது தங்கள் பகுதியின் அடையாளமாக நீடிக்கிறது எனப் பூரிக்கின்றனர் நெடுவாசல் கிராம மக்கள்!
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments