புல்லட் ரயிலுக்கு சவால்; சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 மணி நேரத்தில் போய்விட முடியும். 'வந்தே பாரத்' ரயில் குறித்த ஒரு பார்வை




Vande bharat: புல்லட் ரயிலுக்கு சவால்; ரூ.115 கோடி; 2 நிமிடத்தில் 160 கி.மீ பயணம்; இந்த வேகத்தில் சென்றால், சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 மணி நேரத்தில் போய்விட முடியும். 'வந்தே பாரத்' ரயில் குறித்த ஒரு பார்வை.

160+ வேகத்தில் சென்றால், சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 மணி நேரத்தில் போய்விட முடியும். வந்தே பாரத் ரயில் குறித்த ஒரு பார்வை

வந்தே பாரத் 2.0... இந்தியாவின் பெருமைக்குரிய தயாரிப்பான இந்த ரயில், ஒரு விமானத்தில் பறந்து செல்வது போன்ற சொகுசான விரைவுப் பயணத்தை நமக்கு வழங்குகிறது. ஜப்பான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் புல்லட் ரயில்களுக்கு சவால் விடும் தொழில்நுட்பத்துடன் இந்த ரயில் உருவாகியுள்ளது. ரயில்களில் இன்னும் வேகமாக நாம் செல்வதை சாத்தியமாக்கியுள்ளது. இதை வடிவமைத்தவர்கள், நம் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை பொறியாளர்கள்.
பிரதமர் மோடி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தல்
பிரதமர் மோடி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தல்
குஜராத் தலைநகர் காந்தி நகரிலிருந்து மும்பைக்கு தன் முதல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இதைத் தொடங்கிவைத்து, இதில் அரை மணி நேரம் பயணம் செய்தார்.

ஏற்கெனவே இதே பெரம்பூரில் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம் இது. செல்போன்களில் அடிக்கடி அப்கிரேட்கள் செய்வது போல, அப்கிரேட் செய்யப்பட்ட ரயில் வெர்ஷன் இது. ராஜ்தானி, சதாப்தி போல நிறைய விரைவு ரயில்களை விட வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்காக வெளிநாடுகளிலிருந்து ரயில் என்ஜின்களையும் ரயில் பெட்டிகளையும் இறக்குமதி செய்யலாம் என்று பார்த்தால், அவற்றின் விலை அதிகமாக இருந்தது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதன் முதல் ரயிலை 2018-ம் ஆண்டு ஓட வைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த ரயிலுக்கு 'ட்ரெயின் 18' என்று பெயரும் வைத்தார்கள். நான்கு ஆண்டுகள் திட்டமிடல் மற்றும் கட்டுமானத்துக்குப் பிறகு 2019 பிப்ரவரியில் ரயில் தயாரானது. பரிசோதனைகளின்போது இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர் உச்சபட்ச வேகத்தையும் தொட்டது. 200 கி.மீ வேகம் வரை போக முடியும் என்றாலும், அந்த வேகத்தில் இதை ஓட்டவில்லை. இந்த வேகத்தில் சென்றால், சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 மணி நேரத்தில் போய்விட முடியும். என்னதான் ரயில் இந்த வேகத்துக்குப் போகும் என்றாலும், அந்த வேகத்தைத் தாங்கும் திறனுடன் ஒரு சதவிகித தண்டவாளங்கள் கூட இந்தியாவில் இல்லை. அதனால், 130 கி.மீ மட்டுமே அதிகபட்ச வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயித்தார்கள்.

வந்தே பாரத் ரயில்

முதல் வந்தே பாரத் ரயில் டெல்லியிலிருந்து வாரணாசிக்குப் போனது. 2019 பிப்ரவரி 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இதைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்குமுன்பு 12 மணி நேரம் ஆனது வாராணாசி செல்ல! அதை எட்டு மணி நேரப் பயணமாக இந்த ரயில் குறைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்த ரயில் டெல்லியிலிருந்து வைஷ்ணவதேவி கோயில் வரை சென்றது. இப்போது மூன்றாவது ரயில் காந்தி நகரிலிருந்து மும்பை செல்கிறது.

முந்தைய ரயில்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இந்த ரயிலில் உண்டு. அதனால்தான் இதற்கு 2.0 என்று பெயர் வைத்து பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு ரயில் பயணம் என்பது வேகமாகவும், பாதுகாப்பானதாகவும், அதிர்வுகள் அதிகம் இல்லாததாகவும் அமைய வேண்டும். அதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ரயில் இது.
வந்தே பாரத் 2.0 ஒரு ரயிலை உருவாக்க 115 கோடி ரூபாய் செலவாகிறது. இந்த ரயில் கிளம்பிய இரண்டே நிமிடங்களில் 160 கி.மீ வேகத்தை எட்டி விடும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மெட்டீரியலில் உருவாக்கப்பட்ட ரயில் என்பதால், வழக்கமான ரயில்களைவிட இதன் எடை குறைவு. வழக்கமான ரயில்களைவிட தளம் உயரமாக அமைக்கப்பட்டது என்பதால், உள்ளே பெரிதாக அதிர்வுகள் இருக்காது. தண்டவாளங்கள் இரண்டு அடி உயரத்துக்கு மழைநீரில் மூழ்கியிருந்தாலும், இந்த ரயில் தங்கு தடையின்றி செல்லும்.








வந்தே பாரத் இருக்கை வசதிகள்

சதாப்தி ரயில்கள் போல இந்த ரயில், எல்லா பயணிகளும் உட்கார்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. இருக்கைகள் அனைத்தும் விமான இருக்கைகள் போல நன்கு சாய்த்து உட்காரும் வசதி கொண்டது. எக்ஸிக்யூடிவ் கோச்சில் உள்ள இருக்கைகளை 180 டிகிரி திருப்பிக் கொள்ளலாம். குழுவாகச் செல்பவர்கள், அடுத்தடுத்த வரிசை இருக்கைகளைத் திருப்பி எதிரெதிரே உட்கார்ந்தபடி பேசிக்கொண்டு செல்ல முடியும். பெரிய பெரிய ஜன்னல்கள் கொண்ட பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு எமர்ஜென்சி ஜன்னல்கள் இருப்பதால், பயமின்றி பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளும் சுலபமாகப் பயன்படுத்த முடிகிற வசதிகள் கொண்ட அதிநவீன கழிப்பறை வசதிகள் இதில் உள்ளன.

மெட்ரோ ரயில் போல தானியங்கி கதவுகள் இருப்பதால், அத்துமீறி யாரும் உள்ளே வர முடியாது. ரயில் முழுக்க சி.சி.டி.வி கண்காணிப்பில் இருக்கும். காற்றை சுத்திகரிக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட பெட்டிகள் என்பதால், சுகாதாரமான பயணம் உத்தரவாதம். 'கவச்' என்ற பாதுகாப்பு அமைப்பு இந்த ரயிலின் கூடுதல் சிறப்பம்சம். சிக்னல் கோளாறு போன்ற ஏதாவது பிரச்னைகளால் விபத்து ஏற்படும் சூழல் வந்தால், நிலைமையை உணர்ந்து இதன் தானியங்கி பிரேக்குகள் செயல்பட்டு ரயிலை நிறுத்திவிடும்.

வந்தே பாரத்

இந்த ரயிலின் சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லாமே இந்தியத் தயாரிப்புகள் என்பது பெருமிதமான தகவல். இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அடுத்த ஆகஸ்ட் மாதத்துக்குள் இன்னும் 72 வந்தே பாரத் ரயில்களை உருவாக்குகிறது பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், அடுத்த ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும்போது 75 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் ஓடும். அதில் சில ரயில்கள் தமிழகத்திலும் ஓடும்.

இந்த ரயிலின் வெற்றியைப் பார்த்துவிட்டு பல நாடுகள் இதை வாங்க முன்வந்துள்ளன. உலகத்தரமான ரயில் பெட்டிகளை பல ஐரோப்பிய நாடுகள் சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்கின்றன. இந்தியா இதை மலிவு விலையில் உருவாக்கி, ஆறு கோடி ரூபாய்க்கு விற்க முடியும். அதனால் வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவுக்கு வெளிநாட்டு விற்பனை வாய்ப்பையும் தந்திருக்கின்றன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments