7 மாதங்களில் ரூ. 463 கோடி வருமானம் திருச்சி ரயில்வே கோட்டம் சாதனை






திருச்சி ரயில்வே கோட்டம் கடந்தாண்டை விட நிகழாண்டு 7 மாதங்களில் 2.5 மடங்கு அதிகளவிலான சரக்குகளைக் கையாண்டு ரூ.463 கோடி வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தின் மத்தியப் பகுதியாக விளங்கும் திருச்சியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு தற்போது வரை சிறப்பாகச் செயல்படுகிறது திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம்.

இக்கோட்டத்தில் இயக்கப்படும் 170 விரைவு ரயில்கள், பாசஞ்சா் ரயில்கள், வாரந்திர ரயில்களில் மாதந்தோறும் 45 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். இதையும் தாண்டி மாதம் 10 லட்சம் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டு மொத்த ரயில்வேயின் வருமானத்தையும் கணிசமான பங்கு உயா்த்தி வருகிறது இக்கோட்டம்.

இந்நிலையில் 7 மாதங்களுக்குள் அதிகபட்ச அளவிலான சரக்குகளைக் கையாண்டு, இலக்கைத் தாண்டி இக்கோட்ட பயணிப்பது குறித்து திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா் கூறியது

திருச்சி கோட்ட ரயில்வே நிலையங்களில் அதிகளவிலான சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மிகவும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் மாநில அரசுகள், பெரு நிறுவனங்கள், வியாபாரிகள் பலா் திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகத்தை நம்பி, பெருமளவிலான சரக்குகளை ரயில்களின் வழியே அனுப்புகின்றனா்.

அந்த வகையில், கடந்த 2020-21 ஆம் நிதியாண்டில் 84.30 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.453 கோடி வருமானமும், 2021-22 ஆம் நிதியாண்டில் 87.70 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.451 கோடி வருமானமும் ஈட்டியது.

நிகழாண்டு ஏப்ரல் முதல் அக். 31 வரையிலான 7 மாதங்களில் 79.37 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு ரூ.463 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 43.94 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு கிடைத்த ரூ. 207 கோடியை விட 2.5 மடங்கு அதிகம் ஆகும்.

எங்களது சுலபத் தொடா்பு, குறைந்த வாடகை, பாதுகாப்பான சரக்கு கையாளுகை ஆகியவற்றால் வருங்காலங்களில் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் கையாளப்படும் சரக்குகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

சிறப்புச் சலுகைகள்...: வருங்காலங்களில் சரக்குகளை அதிகளவில் கையாள தெற்கு ரயில்வே நிா்வாகம் செயல் திட்டங்களை வகுத்துள்ளது. அதன்படி, ரயில்வே போா்டு நடைமுறைகளைப் பின்பற்றி முதல் முறை அதிகளவில் சரக்குகள் அனுப்பும் நிறுவனங்களுக்கு சரக்கு வாடகையில் 30 சதம் தள்ளுபடி வழங்கப்படும். அடுத்ததாக சரக்குகளை அனுப்பும்போது வாடகையில் 15 சதம் தள்ளுபடி வழங்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதைப் பயன்படுத்தி பெரு நிறுவனங்கள் பல தங்களது சரக்குகளை அதிகளவில் கையாள திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகத்தை அணுகியுள்ளன. இதன் மூலம் வருங்காலங்களில் சரக்கு கையாளுகை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம் என்றனா் ரயில்வே அதிகாரிகள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments