மணமேல்குடி அருகே இறந்தவர் உடலை வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லும் அவலம்மணமேல்குடி அருகே இறந்தவர் உடலை வயல் வழியாக மயானத்திற்கு எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது. சாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கிருஷ்ணாஜிபட்டிணம் ஊராட்சி கொள்ளுத்திடல் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துu வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்காக சாலை வசதி இல்லாமல் உள்ளது. சாலை வசதி இல்லாத காரணத்தால் அந்த கிராமத்தில் இறந்தவர்கள் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர் இறந்து விட்டார். இவரது உடலை உறவினர்கள் பாடையில் கட்டி சுமந்தவாறு வயல்கள் வழியாக தூக்கி சென்றனர். தற்போது மழை காலம் என்பதால் வயல்களில் விவசாயம் செய்திருப்பதால் பயிர்களை மிதித்து சேற்றில் இறங்கி தூக்கி சென்றனர். கோரிக்கை வயல் வழியாக, மயானத்துக்கு இறந்தவர்கள் உடலை தூக்கி செல்லும்போது தூக்கி செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. அப்போது அவர்கள் காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது. சேறும், சகதியுமாக உள்ள வயல்வெளி வழியாக இறந்தவர்கள் உடல்களை கொண்டு செல்ல முடியாத அவல நிலையில் உள்ளது.

பல ஆண்டுகளாக மயானத்திற்கு சாலை வசதி கேட்டு அரசிற்கு மனு கொடுத்தும் சாலை வசதி கிடைக்கவில்லை. எனவே மயானத்திற்கு செல்ல உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர்கள் சேதப்படுகிறது இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த துரைமுருகன் கூறுகையில், கொள்ளுத்திடல் கிராமத்திற்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி கேட்டு வருகின்றோம். ஆனால் அரசால் செய்து தரப்படவில்லை. மழை காலங்களில் இறந்தவர்கள் உடலை தூக்கி செல்ல முடியவில்லை. வயல் வழியாக தூக்கி செல்லும்போது வயலின் உரிமையாளர்கள் பயிர்களை சேதப்படுத்தாமல் செல்லுங்கள் என கூறுகின்றனர். இறந்தவர் உடலை கொண்டு செல்ல பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். நாங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே உடனே நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments