புதுக்கோட்டையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்: தேசிய கொடியை கலெக்டர் ஏற்றி மரியாதை தியாகிகள் கவுரவிப்பு; பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்




புதுக்கோட்டையில் குடியரசு தின விழாவில் தேசிய கொடியை கலெக்டர் கவிதாராமு ஏற்றி மரியாதை செலுத்தினார். தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

குடியரசு தின விழா

நாடு முழுவதும் 74-வது குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை கலெக்டர் கவிதாராமு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு திறந்த ஜீப்பில் நின்றபடி பார்வையிட்டார். சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், நாட்டின் தேசிய கொடியில் உள்ள மூவர்ணத்தை குறிக்கும் வகையிலான பலூன்களை அவர் பறக்கவிட்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

பாராட்டு சான்றிதழ்கள்

விழாவில் காவல்துறையை சேர்ந்த 47 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 548 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 428 மதிப்புடைய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் 7 பள்ளிகளை சேர்ந்த 720 மாணவ, மாணவிகள் தேசபக்தி பாடல், செம்மொழியாம் தமிழ்மொழி, தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள், தாய் தமிழின் சிறப்பு, எங்கள் பாரதம், தேசிய ஒருமைப்பாடு, பிரமிடு என்ற தலைப்புகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதில் நடனமாடியும், யோகாசனம், சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் செய்து அசத்தினர்.

மாணவர்களுக்கு பரிசுகள்

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரமேஷ்கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களும் திரளாக பங்கேற்று விழாவை கண்டுகளித்தனர். கலை நிகழ்ச்சிகளில் முதல் 3 இடம் பிடித்த பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments