பேராவூரணியில் இருந்து ஆவுடையார்கோவிலுக்கு பஸ் இயக்கப்படுமா?




தஞ்சாவூர் பேராவூரணியில் இருந்து ஆவுடையார் கோவிலுக்கு பஸ் இயக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோவில் வரை புதிய வழித்தடத்தில் (தடம் எண்:பி96) கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு 4 முறை பஸ் இயக்கப்பட்டது.

7 மாத காலம் சரியான முறையில் பஸ் போக்குவரத்து நடந்தது. இதன் மூலம் 33 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன் அடைந்து வந்தனர். இந்த நிலையில் பஸ் இயக்கம் 2 முறையாக குறைக்கப்பட்டது.

கலெக்டரிடம் மனு

இதை மீண்டும் 4 முறை இயக்க வேண்டும் என சொர்ணக்காடு கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாமில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் பயனாக பஸ் மீண்டும் 4 முறை இயக்கப்பட்டது. சில மாதங்களிலேயே இந்த பஸ் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கடந்த 2018-ம் ஆண்டு மாவட்ட கலெக்டருக்கும், அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட முதன்மை மேலாளருக்கும் மனு கொடுக்கப்பட்டது. இதன் பின்னர் பேராவூரணி தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்து ஒரு மாத காலம் பஸ் இயக்கப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பேராவூரணி அசோக்குமார் எம்.எல்.ஏ. வேண்டுகோளின்படி ஒரு சில நாட்கள் 2 முறை பஸ் இயக்கப்பட்டது. பின்னர் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.

எனவே பேராவூரணியில் இருந்து ஆதனூர், மணக்காடு, மங்களநாடு, சுப்பிரமணியபுரம், நாகுடி வழியாக ஆவுடையார்கோவில் வரை பஸ்சை நாள் ஒன்றுக்கு 5 முறை இயக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments