தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீரமங்கலம் கிளை சார்பில் தெருமுனை கூட்டம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீரமங்கலம் கிளை சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளை சார்பாக 06/08/2023 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச்செயலாளர் முகமது மீரான் தலைமை வகித்தார்.கிளை தலைவர் சவூர் மைதீன், பொருளாளர் நஸ்மல் ஹுசைன், செயலாளர் அசன் கனி, துணை தலைவர் சாகுல் அமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக மாநில துணை பொதுசெயலாளர் முஜீபுர் ரஹ்மான் மற்றும் ஆவணம் ரியாஸ், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இதில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தவ்ஹீதும், தர்பியத்தும். 
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எனும் இப்பேரியக்கம் பட்டிதொட்டி எங்கும் வேர் பரப்பி ஏகத்துவ பிரச்சாரத்தை செய்து வருகிறது. ஏராளமான கிளைகள், பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என அல்லாஹ்வின் அருளால் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது.
கொள்கை ரீதியான தொடர் எழுச்சிப் பயணத்திற்கு தனிநபர்களின் கொள்கை உறுதியும் மார்க்க அறிவும் இன்றியமையாதது. இதை கருத்தில் கொண்டு “தவ்ஹீதும் தர்பியத்தும்" எனும் செயல்திட்டத்தை வரும் ஜுன் முதல் தேதியிலிருந்து செப்டம்பர் வரை (4 மாதங்கள்) நடைமுறைப்படுத்த வேண்டும் என மாநில தலைமை சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மிகச்சிறப்பாக எமது கிளை/மாவட்ட மர்கஸில் நிறைவேற்ற வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
அதிர்ச்சி ரெயில் கொலைகள்
2. சமீபத்தில் ஜெய்பூர் - மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் பயணத்தில் அதிகாலை 5 மணிக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.பி.எப் கான்ஸ்டிபள் சேத்தன் சிங் என்பவன் அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தால் சப் இன்ஸ்பெக்டரையும், 3 முஸ்லிம்களையும் சுட்டு வீழ்த்தியுள்ளான். இதில் சப்-இன்ஸ்பெக்டர் டிகா ராம் மீனா மற்றும் பயணிகளான அப்துல் காதர்பாய் முகமது ஹுசைன் பன்புர்வாலா, அக்தர் அப்பாஸ் அலி, மற்றும் சதர் முகமது உசேன் ஆகியோர் உயிரிழந்து விட்டனர். இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட அந்த நேரத்தில் பிரதமர் மோடி குறித்தும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் பேசியுள்ளான். தொடர்ச்சியாக முஸ்லிம்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இந்தியாவில் வாடிக்கையாகிவிட்ட இந்த சூழ்நிலையில் இரயில் பயணத்தில் காவல்துறையினரே இப்படி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவது மக்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பெரும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட பயங்கரவாதிக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மணிப்பூர் கலவரம்
3. மணிப்பூரில் நடந்து வரும் தொடர் வன்முறையால நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். மெயிட்டி, குக்கி இனங்களுக்கான இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது, முதல்வர் பிரேன் சிங்கின் அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இந்நேரத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல், குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, கடந்த மே மாதம் 4-ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை இந்த தெருமுனை கூட்டம் வாயிலாக வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம், மேலும் தொடர் வன்முறைகளை நிறுத்தும் வகையில் முதல்வர் பிரேன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட வேண்டும் , மேலும் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்த நம்பிக்கைக்குரியவர்கள் கொண்ட குழுவை அமைத்து இருதரப்பு மக்களுக்கும் சாதகமான ஒரு தீர்வு விரைவில் எட்டப்பட வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
பொதுசிவில் சட்டம்
4.பொதுசிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களும், மத அமைப்புகளும் கருத்துக்களை தெரிவிக்க ஒன்றிய சட்ட ஆணையம் அறிவித்து சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமான கருத்துக்கள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக, விசிக, அதிமுக போன்ற கட்சிகள் இச்சட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது வரவேற்கத்தக்கது நம் நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகவே உள்ளது. ஆனால் திருமணம் , விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்துரிமை, ஈமக் காரியங்கள் போன்ற உரிமை சார்ந்த விவகாரங்களில் மட்டும் ஒவ்வொருவரும் தத்தமது மதச் சட்டங்களின் படி நடந்து கொள்ள நம் நாட்டுச் சட்டம் வகை செய்கின்றது. பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் இதுவே ஏற்றமான சட்டமும் சமத்துவத்திற்கான வழிமுறையுமாகும்.
எனவே இந்தியாவின் இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் எதிராக அமைந்துள்ள இந்த பொது சிவில் சட்டம் தொடர்பான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது.
வெள்ளை அறிக்கை 
5. தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மூன்றரை சதவீத இடஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை. மதம் மாறி இஸ்லாத்தை தழுவியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன்பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடிகள் உள்ளது. தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரிநிதித்துவ முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் இடஒதுக்கீடு 
6. கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார்.அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுக அரசும் இதை செய்யவில்லை. சிறுபான்மையினரான முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்தி தர வேண்டும் என்று இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
முஸ்லிம் சிறைவாசிகள் 
7. தமிழக சிறை வாசிகள் ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது இல்லை.
மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த வேற்றுமை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும் என இந்த கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
கல்வியில் கவனம் செலுத்துவோம். 
8. இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் அதில் ஒன்று கல்வியின்மையாகும். பல கோடி மக்களை கல்வி வேலைவாய்ப்பில் முன்னேற்றுவது என்பது ஒரு அரசுக்குத்தான் சாத்தியம் என்றாலும் இஸ்லாமிய சமூகம் தன்னளவில் செய்ய வேண்டிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உயர்கல்வியில் தன்னை முன்னேற்றி கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும் எனும் செய்தியை தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என இந்த கூட்டம் வாயிலாக அறிவித்து கொள்கிறோம்
9.கீரமங்கலத்தில் சமீப காலமாக (கீரமங்கலம் மேற்கு முஸ்லிம் பேட்டையில்) குரங்குகள் மற்றும் நாய் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. திடீரென்று வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் வீட்டிலிருக்கும் குழந்தைகள்,முதியவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதால் பேரூராட்சி நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு அடிப்படை நடவடிக்கை எடுக்குமாறு கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
10.கீரமங்கலம் முஸ்லிம் பேட்டையில் வடிகால் கால்வாய் இல்லாத காரணத்தினாலும் பல்வேறு இடங்களில் வடிகால் கால்வாய் அடைப்பு இருப்பதாலும் மழைநீர் சரியாக அந்த வடிகால் கால்வாய்களில் செல்ல முடியாமல் வீட்டிற்குல் செல்லும் அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் இந்த வடிவாய் கால்வாய்களை சரி செய்யுமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments