வடகிழக்கு பருவமழை காலம்: பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? கல்வித்துறை சுற்றறிக்கை
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் சூழ்நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களை சுற்றறிக்கையாக அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்கவேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

* மழையினால் பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிவறைகள் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனை பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

* அனைத்து மின் இணைப்புகள் சரியாக இருக்கின்றனவா? எனவும், மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் உள்ளனவா? என்பதையும் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் மின் இணைப்பை துண்டிக்கலாம்.

* மின்மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும்.

* பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, தரைப்பட நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால் அது மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா? என உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஆபத்தான நிலையில் உயர்மின் அழுத்தம் உள்ள மின்கம்பங்கள், அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருந்தால் அதனை மின்வாரியத்தின் உதவியுடன் அகற்றவேண்டும்.

அறிவுரை

* பள்ளியில் உள்ள அனைத்து கட்டிடங்களில் மேற்கூரைகள், கைப்பிடிச் சுவர்கள், மேநிலை நீர்த்தேக்க தொட்டிகள், ஜன்னல், கதவுகள் உறுதியாக இருக்கிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பின் மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு இடிப்பது அவசியம். இல்லையென்றால் அந்த கட்டிடத்துக்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments