கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: 56½ லட்சம் குடும்ப தலைவிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அதிகாரி விளக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 56½ லட்சம் குடும்ப தலைவிகளின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்று திட்டம் தொடர்பான அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

1 கோடியே 6½ லட்சம் பேர் தேர்வு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்ப தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த உடன் ரூ.1,000 உரிமைத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

இந்தநிலையில், 56½ லட்சம் குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பான அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கு யார்? யார்? தகுதியானவர்கள் என்பதை தேர்ந்தெடுக்க குறிப்பிட்ட தகுதிகள் அளவுகோலாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதன்படி 2½ லட்சம் ரூபாய்க்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள்; 5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 10 ஏக்கர் புஞ்சை நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள்; ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்காக 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு தான் மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அளவுகோல் விதிக்கப்பட்டிருந்தது.

3,600 யூனிட்டுக்கு அதிகமாக...

இதற்கு தகுந்தாற் போல், கணினியில் மென்பொருள் (சாப்ட்வேர்) உருவாக்கப்பட்டு இருந்தது. குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்யும்போதே மேற்கூறியவற்றில் ஏதேனும் ஒரு நிபந்தனையை மீறும்போது அந்த மனுக்கள் பட்டியலில் இருந்து நிராகரிக்கப்படும் வகையில்தான் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும், ஆண்டு வருமானம் 2½ லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் குடும்பங்கள், அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் கார், ஜீப், டிராக்டர் போன்ற வாகனம் வைத்திருப்பவர்கள், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள், விதவை ஓய்வூதியம் பெறுபவர்கள் திட்டத்தில் பயன்பெற முடியாது என்று தெளிவாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நிராகரிக்கப்பட்ட 56½ லட்சம் மனுக்களில் லட்சக்கணக்கான மனுக்கள் ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய வகையில் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது தான் குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக ஆண்டு வருமானம் அதிகம் உள்ளவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் அரசு ஊழியர் குடும்பம்

இதேபோல் அரசு வேலை பார்ப்பவர்களின் வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் சுமார் 3 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். அவையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. மொத்தத்தில் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்த பெண்களில் 65 சதவீதம் மனுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 35 சதவீத மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், தகுதியானவர்களுக்கு மாதந்தோறும் பணம் வழங்குவதற்காக ரூ.1,000 கோடி வீதம் 7 மாதத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக மாதம் ரூ.60 கோடி தேவைப்படுகிறது. இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு துணை நிலை அறிக்கையில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments