தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் தகவல்




தமிழகத்தில் 6 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 19-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

19-ந் தேதி (இன்று) மத்திய வங்க கடலின் மத்திய பகுதியிலும், 20-ந் தேதி (நாளை) மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

அதிகபட்ச மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பார் அணை, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தலா 13 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி, ஊத்தங்கரையில் தலா 12 செ.மீ. மழையும், புள்ளம்பாடியில் 11 செ.மீ. மழையும், தண்டராம்பேட்டையில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments