கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வருகிற 1-ந் தேதி கடைசி நாள்
கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 1-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும், மண்டல இணைப்பதிவாளருமான ராஜேந்திர பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவியாளர் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு அச்சகம் மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த 10-ந்தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.drbpdk.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே வருகிற 1-ந்தேதி அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத்தேர்வு 24.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023-24-ம் ஆண்டு நேரடி பயிற்சி, அஞ்சல்வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று, கட்டணம் செலுத்தியதற்கான ரசீதினை புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத்தேர்வு

முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. எழுத்துத்தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை, கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொதுஅறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத்தேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கானதாகவும், தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

ஒதுக்கீடு

எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85.15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://www.drbpdk.in வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments