புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதல்; வேளாண் அதிகாரிகள் ஆய்வு




புதுக்கோட்டை சம்பா நெற்பயிரில் நோய் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சம்பா சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் 82 ஆயிரத்து 613 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி ஆகிய வட்டாரங்களில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் (தர கட்டுப்பாடு) மதியழகன் மற்றும் வம்பன் தேசிய பயிர் வகை ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் ராஜாரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை அலுவலர் முகம்மது ரபி ஆய்வின் போது உடன் இருந்தார்.

ஆலோசனைகள்

ஆவுடையார்கோவில் வட்டாரத்திலுள்ள பூவலூர், விளிமங்கலம் ஆகிய கிராமங்களில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் உள்ள நெல் வயல்களில், வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சவிதாவுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டாரத்தில் பரவலாக இலை சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் மற்றும் குலை நோய் தாக்குதல் தென்பட்டது.

மேலும் வேளாண்மை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணனுடன் மணமேல்குடி வட்டாரத்திலுள்ள செம்பனாப்பொட்டல் கிராமத்திலும், வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்ரியா உடன் அறந்தாங்கி வட்டாரத்திலுள்ள கண்டிச்சாங்காடு கிராமத்தில் நெல் சாகுபடி வயல்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட கிராமங்களில் காணப்படும் இலைச்சுருட்டுப் புழுக்கள் மற்றும் ஆனைக்கொம்பன் பூச்சியினை கட்டுப்படுத்திட தேவையான மருந்து குறித்து விவசாயிகளிடம் ஆலோசனைகளாக அதிகாரிகள் கூறினர்.

உழவன் செயலி

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் பூச்சி நோய் தாக்குதல் ஏதேனும் தென்பட்டால் உழவன் செயலிலுள்ள பூச்சி நோய் கண்காணிப்பு என்ற அமைப்பின் மூலம் தாக்குதலின் அறிகுறியினை புகைப்படம் எடுத்து அனுப்புவதன் மூலம் பரிந்துரைகளை பெற்று பயன் பெறலாம்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு தங்கள் அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments